விளையாட்டு

ஹாக்கி இந்தியா லீக் கோப்பையை தக்கவைக்க தயார்: டெல்லி ஸ்ட்ரைக்கர்கள் சூளுரை

செய்திப்பிரிவு

2015 ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் அதிக கோல்களை அடித்து எங்கள் அணி கோப்பையை தக்கவைப்பதற்கு உதவியாக இருப்போம் என டெல்லி வேவ்ரைடர்ஸ் அணியின் ஸ்டிரைக்கர்கள் ஜேசன் வில்சன் (ஆஸ்திரேலியா), சைமன் சைல்டு (நியூஸிலாந்து) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

3-வது ஹாக்கி இந்தியா லீக் போட்டி வரும் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 22-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வில்சன் கூறியிருப்பதாவது:

நானும், சைமனும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள். சர்வதேச போட்டிகளில் நாங்கள் எதிரெதிர் அணிகளில் விளையாடினாலும், ஹாக்கி இந்தியா லீக் மூலமாக ஒரே அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றதோடு, ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டோம். போட்டியின்போது நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து விளையாடுவோம். ஒருவருடைய நகர்வை மற்றொருவர் முன்னதாகவே கணித்து விடுவோம். வெளிப்படையாக பேசுவதானால், முன்னதாகவே கணிப்பதன் மூலம் அதிகளவில் கோலடிக்கும் வாய்ப்பை பெறு கிறோம். இது எங்கள் அணிக்கும் நல்லது.

சைமன் திறமையான மற்றும் நுட்பங்கள் அறிந்த வீரர். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. போட்டி தொடர்பான எங்களின் உத்தியில் அவர் மிக முக்கியமான நபர். பயிற்சியாளர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த ஆண்டு அதிக கோல்களை அடித்து எங்கள் அணியை மீண்டும் கோப்பையை வெல்ல வைக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் விளையாடுவதற்காக காத்திருக்கிறோம் என்றார்.

அனுபவம் கொண்டவர் வில்சன்

சைமன் சைல்டு கூறுகையில், “அணியில் ஜேசன் வில்சன் இருப்பது மிகப்பெரிய உதவியாக உள்ளது. அவர் பல்வேறு நாடுகளில் பல்வேறு போட்டிகளில் விளையாடி யவர். மிகுந்த அனுபவம் கொண்டவர். அவருடைய அனுபவம் எங்கள் அணிக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. குறிப்பாக எனக்கு. போட்டியின்போது பேசாமல் செய்கை மூலமாகவே பல திசைகளில் பந்தை எடுத்துச் செல்வோம். சில நேரங்களில் ஜேசன் எனக்கு கோலடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார். சில நேரங்களில் நான் அவருக்கு கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன்” என்றார்.

நடப்பு சாம்பியனான டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஜனவரி 23-ம் தேதி லக்னோவில் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT