ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகாவிடம் 285 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தமிழ்நாடு.இதன் மூலம் இந்த ரஞ்சி போட்டியில் முதல் ஆட்டத்திலேயே தமிழ்நாடு அணி தோல்வியைச் சந்தித்துள்ளது.
பெங்களூரூவில் 7-ம் தேதி தொடங்கி இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் ராமசாமி பிரசன்னா முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த கர்நாடகா 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிதம்பரம் கவுதம் அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணியில் தொடக்க வீரர் அபினவ் முகுந்த அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். கேப்டன் பிரசன்னா 59 ரன்கள் சேர்த்தார். எனினும் தமிழ்நாடு அணியால் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.
இதையடுத்து கர்நாடக அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் சிறப்பாக பேட்டிங் செய்த அந்த அணி வீரர்கள் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தனர். தொடக்க வீரர்கள் ராபின் உத்தப்பா, அகர்வால் ஆகியோர் முறையே 76, 80 ரன்கள் எடுத்தனர்.
தமிழ்நாடு அணி வெற்றி பெற 368 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்ஸை பேட்டிங்கை தொடங்கிய தமிழகம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று தமிழக வீரர்களில் ஒருவரால் கூட நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. தொடக்க வீரர் அபினவ் முகுந்த் 16 ரன்கள் எடுத்ததே, அணியில் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இறுதியில் தமிழ்நாடு அணி தனது 2-வது இன்னிங்ஸில் 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 285 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.