விளையாட்டு

ஜான்சன் மீது மரியாதை இல்லை: கோலி

செய்திப்பிரிவு

ரன் அவுட் செய்யும் முயற்சியில் ஜான்சன், பந்தை வீசி எறிந்த சம்பவம் பற்றி கோலி கூறும்போது, “ஆஸ்திரேலிய வீரர்கள் என்னை அடம்பிடிக்கிறவர் என்று அழைத்தார்கள். இருக்கலாம், நான் அப்படித்தான் என்று பதில் கொடுத்தேன். மைதானத்தில் வாக்குவாதம் செய்ய எனக்கு தயக்கமில்லை. அது என் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவுகிறது. அவர்கள் இதிலிருந்து பாடம் கற்றதுபோல தெரியவில்லை.

ஜான்சன் என் மீது பந்தை வீசியதால் கோபமடைந்தேன். பந்தால் ஸ்டம்பை அடிக்க முயற்சி செய். என்னை அல்ல என்று அவரிடம் சொன்னேன். ஆஸ்திரேலிய வீரர்கள் சிலருடன் நல்ல நட்பு உள்ளது. ஆனால், என்னை மதிக்காத ஜான்சன் போன்றவர்கள் மீது எனக்கும் மரியாதை இல்லை.

டெஸ்ட் தொடரில் அவர்கள் முன்னிலை பெற்றுள்ளதால் எங்களை வெறுப்பேற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் ஆடியபோது தொடர்ந்து தோல்வியடைந்ததால் அவர்கள் இதுபோல பேசவில்லை. ஆனால், நாங்கள் இரண்டு டெஸ்டுகளில் தோற்றபோதும் பதிலடி கொடுத்துள்ளோம். எங்களுடைய பேட்ஸ்மேன்களால் என்ன செய்யமுடியும் என நிரூபித்துள்ளோம். இன்று (நேற்று) ஆஸ்திரேலிய வீரர்கள் 3 கேட்சுகளை நழுவவிட்டார்கள். பலமுறை சரியாக ஃபீல்டிங் செய்யவில்லை. இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் கிட்டத்தட்ட 500 ரன்கள் எடுத்தபிறகு அவர்களுடைய 2 அல்லது 3 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திவிட்டால் இந்தப் போட்டி சுவாரசியமாக இருக்கும் ” என்றார்.

கோலியை மதிக்கிறோம் - ஹாரிஸ்

ஜான்சன் பற்றி கோலி கூறிய கருத்துகளுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் பதிலளித்தபோது, “எங்கள் அணியில் உள்ள அனைவரும் அவர் மீது மரியாதை வைத்துள்ளோம். அவரை மதிக்கவில்லை என எப்படி நினைக்கிறார் என்று தெரியவில்லை. ஜான்சன் கோலியை ரன் அவுட் செய்யவே முயற்சி செய்தார். அவருடனான வாக்குவாதம் எதுவும் தனிப்பட்ட முறையில் இருக்காது. எல்லாமே வேடிக்கைக்காகப் பேசப்படுவதுதான். கோலி இதைப் பற்றி கவலைப்படுவது எங்களுக்கு நல்லதுதான். இதனால் அவருடைய பேட்டிங் பாதிப்படைய வாய்ப்புண்டு என எண்ணுகிறோம் ” என்றார்.

SCROLL FOR NEXT