அயல்நாட்டு மைதானங்களில் தங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்கிறார் முன்னாள் ஆஸி. தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன்.
தி டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:
“தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியில் வந்தால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்பதே அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம். ஒன்று டெஸ்ட் போட்டியின் முதல் நாளை மோசமாகத் தொடங்குகின்றனர், அல்லது முடிவுத் தருணங்களில் கோட்டை விடுகின்றனர். ஆட்டத்தின் முக்கியத் தருணங்களை அவர்கள் இழக்கின்றனர்.
மேலும், அந்த அணி எழுப்பும் புகார் சத்தங்களும் நன்றாகப்படவில்லை. உணவு விஷயத்தை விட்டு விடுவோம். ஏனெனில் வருகை தரும் அணியினருக்கு விருப்பமான உணவை அளிக்க வேண்டியது மைதான நிர்வாகிகளின் கடமை. மற்றபடி அவர்கள் சாக்கு போக்கிற்காக காரணங்களைத் தேடுகின்றனர்.
4ஆம் நாள் காலை ஷிகர் தவன் களமிறங்க மறுத்த ஒருவிஷயம் அவரது மனநிலையை பிரதிபலிக்கிறது. தோற்று விடுவோம் அல்லது அவுட் ஆகி விடுவோம் என்ற அச்சம் எந்த ஒரு வீரருக்கும் உத்வேகத்தை அளிக்காது, மாறாக ஸ்டீவ் வாஹ் போன்றவர்கள் இத்தகைய சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள்.
தவனின் இந்த முடிவு கேப்டன் தோனி மற்றும் விராட் கோலிக்கும் தர்மசங்கடங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆக்ரோஷம் என்றால் என்னவென்பதன் அர்த்தத்தை தவறாக இந்திய அணியினர் புரிந்து வைத்துள்ளனர். அவர்கள் பந்து வீச்சில் நிறைய திறமைகள் உள்ளன. ஆனால் அனுபவமின்மையினால் சீராக டெஸ்ட் மட்டத்தில் அவர்களால் தொடர்ந்து வீச முடிவதில்லை.
பவுலிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு அனுகூலங்கள் இருந்தாலும், பேட்டிங்கில் இந்திய அணி சரிசமமாகத் திகழ்கிறது. விராட் கோலி ‘வேர்ல்ட் கிளாஸ்’. அவரது ஆட்டத்தில் இந்தியாவுக்கு வாய்ப்புகள் கூடுகின்றன. முரளி விஜய் வேறொரு மட்டத்திற்கு உயர்ந்துள்ளார்.
அவரது பொறுமை மற்றும் மரபான பேட்டிங்குடன் அடித்து ஆடக்கூடிய திறமை வியக்க வைக்கிறது. அவர் டேவிட் வார்னருடன் ஆஸ்திரேலியாவுக்காக களமிறங்கினால் அது ஒரு அசைக்க முடியாத கூட்டணியாகவே இருக்கும். ஆனால் மற்றவர்கள் பலவீனமானவர்களே.”
இவ்வாறு கூறியுள்ளார் மேத்யூ ஹெய்டன்.