ஜம்மு காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 277 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத் தில் தமிழ்நாடு ஜம்மு காஷ்மீர் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று தமிழகம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந் தது. இரண்டாம் நாளன்று சதம் அடித்த முகுந்த், நேற்று 137 ரன் களில் ஆட்டமிழந்தார். பாபா அபராஜித் 73 ரன்களில் ஆட்ட மிழக்க, தமிழகம் 69 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 409 ரன்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கிய ஜம்மு காஷ்மீர், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் 44 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் கஜுரியா மட்டும் தாக்குப்பிடித்து 60 ரன்கள் எடுத்தார். தமிழகத்தின் ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 5, ரஹில் ஷா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். ஜம்மு காஷ்மீரை 277 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தமிழ்நாடு, வருகிற 21ம் தேதி நடக்கும் போட்டியில் மத்தியப் பிரதேசத்துடன் மோதுகிறது.