விளையாட்டு

பவுன்சர் வீசிய சான் அபாட்டிற்கு பெருகும் ஆறுதல்கள்

செய்திப்பிரிவு

பிலிப் ஹியூஸிற்கு பவுன்சர் வீசிய நியூசவுத் வேல்ஸ் பவுலர் சான் அபாட் துயரார்ந்த மனநிலையில் இருப்பதால் அவருக்கும் ஆறுதல்கள் குவிகின்றன.

ஒரு புறம் பிலிப் ஹியூஸ் மரணம் ஏற்படுத்திய சோகம், அதிர்ச்சியினால் அவரது குடும்பத்தினருக்கு அனுதாப மழை பொழிய, பவுன்சர் வீசிய சான் அபாட்டிற்கும் ஆறுதல்கள் பெருகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் 'முற்றிலும் உடைந்து போன’ சான் அபோட்டிற்கு கிரிக்கெட் வட்டாரத்திலிருந்து ஆறுதல்கள் குவிந்து வருகின்றன.

சான் அபாட் வீசிய பவுன்சரை ஆடிய போது பிலிப் ஹியூஸின் பின் மண்டையை பந்து தாக்கியதால் ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.

அன்றைய தினத்தில் பிலிப் ஹியூஸ் நிலைகுலைந்து விழுந்த போது அவர் அருகில் மிகுந்த வேதனையோடு அவருக்கு உதவ வந்தவர் சான் அபாட்.

சான் அபாட் செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனைக்கு நேற்று வந்து பிலிப் ஹியூஸ் குடும்பத்தினரை சந்தித்தார். அவர் மருத்துவமனைக்கு வந்த போது கேப்டன் மைக்கேல் கிளார்க் அவருடன் நீண்ட நேரம் பேசி ஆறுதல் கூறினார். பிலிப் ஹியூசின் சகோதரி மீகனும் சான் அபாட்டிற்கு மன ஆறுதல் அளித்தார்.

நிச்சயம் சான் அபாட்டிற்கு ஹியூஸின் மரணம் பெரிய துர்கனவாகவே அமைந்திருக்கும். அவருக்கும் ஆறுதல் அளிக்க கிரிக்கெட் உலகம் கடமைப்பட்டுள்ளது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இதனிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிலிப் ஹியூஸ் மரணத்திற்கு அஞ்சலி குறிப்பு வெளியிட்டதோடு, பவுன்சர் வீசிய சான் அபாட்டிற்கும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

சான் அபாட்டை அவர் இப்போது இருக்கும் துயாரார்ந்த மனநிலையில் விட்டுவிடக்கூடாது என்று பல கிரிக்கெட் வீரர்களும் ஆறுதலாக கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT