விளையாட்டு

திருவண்ணாமலையில் மாநில அளவிலான தடகள போட்டி : 15 மாவட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் இடையே மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டியை முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னையா தொடங்கி வைத்தார். 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது.

மாணவிகள் பிரிவில் ஈரோடு, நாமக்கல், நாகர்கோவில், திருவண்ணாமலை, பெரம்பலூர், திண்டுக்கல், சென்னை ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 123 மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்கள் பிரிவில் திருச்சி, மதுரை, கோவை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, கடலூர், சென்னை ஆகிய மாவட்டங்கள் மற்றும் என்எல்சி விளையாட்டுப் பள்ளி மாணவர்கள் 235 பேர் பங்கேற் றனர். 100 மீட்டர் முதல் 1,500 மீட்டர் வரையிலான ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், கம்பு ஊன்றி தாண்டுதல் என்று 15 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.

15 மாவட்டங்களைச் சேர்ந்த 358 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ள மாநில தடகள விளையாட்டுப் போட்டி இன்று நிறைவு பெறுகிறது. தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா இன்று மாலை நடைபெறும் விழாவில் தி.மலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறார்.

SCROLL FOR NEXT