தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு, தரவரிசையிலும் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது ஆஸ்திரேலியா.
சிட்னியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டிவில்லியர்ஸ், ஸ்டெயின் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதனால் அந்த அணி ஆம்லா தலைமையில் களமிறங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ஆம்லா 18 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டி காக் சிறப்பாக ஆடி தனது 6-வது சதத்தைப் (117 பந்துகள்) பதிவு செய்தார். அவர் 123 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் எடுத்தார். முன்னதாக ரொசாவ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்வரிசையில் அதிரடியாக ஆடிய பெஹார்டியன் 41 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, அந்த அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஃபாக்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
275 ரன்கள் இலக்கு
தென் ஆப்பிரிக்கா பேட் செய்தபோது மழையால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 48 ஓவர்களில் 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 21 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் பிஞ்ச் 67 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் சேர்த்தார்.
இதன்பிறகு வாட்சன் 82 ரன்களும் (93 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன்), ஸ்டீவ் ஸ்மித் 67 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க, பின்னர் வேகமாக விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா, இறுதியில் 47.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. டி காக் ஆட்டநாயகனாகவும், ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகனாக வும் தேர்வு செய்யப்பட்டனர்.