கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூல் ‘பிளேயிங் இட் மை வே’ விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
புத்தக வெளியீட்டு தினம் மற்றும் விற்பனைத் தொடங்கும் முன்பே ஹாச்செட் இந்தியா வெளியீட்டு நிறுவனத்திற்கு 1,50,000 பிரதிகளுக்கான ஆர்டர்கள் புக் செய்யப்பட்டுள்ளன.
புனைவு மற்றும் புனைவல்லா நூல்களுக்கான ஆர்டர்கள் முன் கூட்டியே இந்த அளவுக்கு வந்ததில்லை. இதில் சச்சின் சுயசரிதை சாதனை படைத்துள்ளதாக புத்தக வெளியீட்டாளர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
வால்டர் இசாக்சன் எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு நூல் 1,30,000 பிரதிகள் விற்றுள்ளது. சச்சின் நூல் தற்போது இந்தச் சாதனையை முறியடித்துள்ளது.
“அவரது பேட்டிலிருந்து சாதனைகள் பிறந்தது போல் அவரது பேனாவும் சாதனைகளை உருவாக்குகிறது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இப்போது அவர் ஆயிரம் நூறுகளைத் தொட்டுள்ளார். இந்த இன்னிங்ஸ் இப்போதுதான் தொடங்கியுள்ளது” என்று ஹாச்செட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் ஆப்ரகாம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.