உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தங்களால் இயன்றவரை அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ஸ்பிரிட்டுடன் ஆடிய ஆப்கான் அணியில் குல்பதீன் நயீப் கேப்டன்ஷிப் பறிக்கப்பட்டு ஸ்டார் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் 3 வடிவங்களுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு துணைக் கேப்டனாக முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான் நியமிக்கப்பட்டுள்ளார், உலகக்கோப்பைக்கு முன்னதாக பல எதிர்ப்புகளுக்கு இடையே அஸ்கர் ஆப்கான் தேவையில்லாமல் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டு குல்பதீன் நயீப் நியமிக்கப்பட்டார், ஆனால் குல்பதீன் நயீப் உலகக்கோப்பையில் சொதப்பு சொதப்பென்று சொதப்பினார், அந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை மறக்க முடியுமா? ஆப்கான் வெற்றி பெற வேண்டிய ஆட்டம் இவர் ஒருவராலேயே பறிபோனது ஆப்கன் ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய ரசிகர்கள் மனதிலும் ஆறா ரணமாக இருந்து வருகிறது.
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக ரஹ்மத் ஷா கேப்டனாக நியமிக்கப்பட்டார், ஆனால் டெஸ்ட் போட்டிகள் நடக்கும் முன்பே தற்போது அவர் நீக்கப்பட்டு ரஷீத் கான் 3 வடிவங்களுக்கும் கேப்டனாக்கப்பட்டுள்ளார்.
ரஷீத் கான் இதுவரை 2 டெஸ்ட்கள், 68 ஒருநாள் போட்டிகள், 38 டி20 சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ளார்.