இந்திய அணிக்கு திடமான 4ம் நிலை வீரர் தேவை என்பதை ஒப்புக் கொண்ட ரவிசாஸ்திரி அந்தப் பிரச்சினையை இன்னும் தீர்க்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டார்.
மேலும் அரையிறுதியில் தோனியை முன் கூட்டியே இறக்கியிருக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவிக்க அதற்கு பதில் அளித்த ரவிசாஸ்திரி,
“அனைவருமே அதில்தான் இருக்கிறார்கள். இது எளிதான முடிவும் கூட, தோனியை முன்னால் இறக்கி அவர் ஆட்டமிழந்திருந்தால் விரட்டலே அத்தோடு செத்துப் போயிருக்கும், இது விரும்பத்தகாதது.
அவரது அனுபவம் பின்களத்தில் தேவை என்பதால்தான் பின்னால் இறக்கினோம். அவர் கிரேட்டஸ்ட் பினிஷர், ஆகவே அந்த வகையில் அவரை பயன்படுத்தாமல் இருந்தோமானால் அது குற்றமாகிவிடும். மொத்த அணியும் தோனியின் டவுன் ஆர்டர் விவகாரத்தில் தெளிவாகவே இருந்தது.
ரிஷப் பந்த்தும் ட்ரெண்ட் போல்ட் வீசும் போது கூட பாதுகாப்பாகத்தானே ஆடினார், ரிஷப் பந்த் மட்டும் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால்... அதுதான் விளையாட்டு. அவர் விரைவில் வளர்ச்சியடைவார், ஏற்கெனவே அவர் தன் தவறை உணர்ந்து விட்டார். பந்த், பாண்டியாவை இழந்த பிறகும் சரணடையவில்லை, போராடினோம் என்பதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தோனி மீண்டும் அபாரம்தான், அவர் மட்டும் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் அவர் மண்டைக்குள் அனைத்து கணக்கீடுகளும் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கும். எந்தப் பந்தை அடிக்க வேண்டும், ஜேம்ஸ் நீஷம் கடைசி ஒவரில் எவ்வளவு அடிக்க முடியும் என்பதையெல்லாம் அவர் தீர்மானித்திருப்பார். அவர் ஆட்டத்தை முடிக்க மிகவும் முனைப்புடன் இருந்தார், அவரது தீவிரம் அவரது உடல் மொழியில் தெரிந்தது, அவர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய பிறகும் கூட அந்த முனைப்பு தெரிந்தது.” இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.