விளையாட்டு

நான் சொன்னதைக் கேட்டார் அக்‌ஷர் படேல்: விராட் கோலி

பிடிஐ

5-வது ஒருநாள் போட்டியில் இடையில் விக்கெட்டுகள் சரிவடைந்ததால் விராட் கோலி கவலையும், கோபமும் அடைந்ததாகத் தெரிவித்தார்.

ராஞ்சியில் நேற்று நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் 139 ரன்கள் எடுத்து இறுதி வரை நின்று ஆடிய விராட் கோலி, 150/2 என்ற நிலையிலிருந்து 40வது ஓவரில் 215/5 என்று சரிவு கண்டதை அடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் மீது விமர்சனம் தொடுத்துள்ளார்.

உத்தப்பா, ஜாதவ், ஸ்டூவரட் பின்னி, அஸ்வின் என்று ராயுடுவுக்குப் பிறகு அடுத்தடுத்து பேட்ஸ்மென்கள் நடையைக் கட்ட, 43.2 ஓவர்களில் இந்தியா 231/7 என்று சற்றே தோல்வி முகம் காட்டியது.

இது பற்றி விராட் கோலி கூறியதாவது:

“எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிவடைந்த போது கோபமும் கவலையும் ஏற்பட்டது. ஆட்டத்தின் சூழ்நிலைமைகளை புரிந்து செயல்பட வேண்டியது அவசியம்.

சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆட வேண்டும். அக்‌ஷர் படேல் நிதானமாக ஆடினார். அவர் நான் சொன்னவற்றுக்கு செவிமடுத்தார். பந்து மட்டைக்கு எளிதில் வரவில்லை. பந்து பழசாகி விட்டால் பெரிய ஷாட்களை ஆடுவது கடினம். எதிர்முனையில் பேட்ஸ்மென்கள் இல்லாமல் தனித்து விடப்பட்டேன். அக்‌ஷர் படேல் காட்டிய அதே கவனத்தை மற்ற வீரர்களும் காட்ட வேண்டும்.

பிறரிடமிருந்து ஒன்றை நாம் எதிர்பார்க்கும் போது, நாம்தான் அவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பது எனது கொள்கை. ஆகவே, நானே நின்று முடித்தேன். எம்.எஸ்.தோனியின் சொந்த மண்ணில் அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடியதில் எனக்கு மகிழ்ச்சி. இந்தத் தொடரில் இளம் வீரர்கள் சிலரின் நிதானப் போக்கை கவனித்திருக்கலாம், அந்த அணுகுமுறை முக்கியமானது.

ரோஹித் சர்மாவின் சாதனையை இப்போதைக்கு உடைக்க முடியாது.” இவ்வாறு கோலி கூறினார்.

SCROLL FOR NEXT