உலகக்கோப்பை போட்டிகளில் 7-வது முறையாக அரையிறுதிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. இதில் இருமுறை மட்டுமே கோப்பையை வென்றுள்ள இந்திய அணி ஒருமுறை இறுதிப்போட்டி வரை வென்று கோப்பையைத் தவறவிட்டதுள்ளது.
மான்செஸ்டரில் நாளை நடக்கும் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்த்து நியூஸிலாந்து அணி களமிறங்குகிறது. இரு அணிகளும் ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்குப் பின் களத்தில் மோதுகின்றனர்.
இந்திய அணி 7-வது முறையாகவும், தொடர்ந்து 3-வது முறையாகவும் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறுகிறது.
இதற்கு முன் கடந்த 1983, 1987, 1996, 2003, 2011, 2015 ஆகிய 6 முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்று இதில் 2 முறை கோப்பையைக் கைப்பற்றியது. இப்போது 7-வது முறையாக முன்னேறுகிறது. இதற்கு முன் நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா 8 முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
1983-ம் ஆண்டு: முதல் வெற்றி
இந்திய அணி முதல் முறையாக 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றது. மான்செஸ்டர் ஓல்ட்டிராபோர்டில் நடந்த இந்த அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி. இதே மான்செஸ்டரில்தான் நாளை இந்தியா, நியூஸிலாந்து ஆட்டம் நடக்கிறது. இந்த மைதானம் இந்திய அணிக்கு ராசியானது என்பது குறிப்பிடத்தக்கது.
1987-ம் ஆண்டு: பழிக்குப் பழி
மும்பையில் நடந்த உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி மோதியது. 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் இந்திய அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து கேப்டன் கூச் 115 ரன்கள் அதிரடியால் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து. இந்திய அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2014 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி கடைசி 15 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோற்றது.
1996 -ம் ஆண்டு: ரசிகர்கள் ரகளை
கொல்கத்தாவில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின. இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 98 ரன்களுக்கு ஒருவிக்கெட்டை இழந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் சச்சின் ஆட்டமிழந்தவுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதைப் பார்க்கப் பொறுக்காத ரசிகர்கள் ரகளையில் இறங்க ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதில் இலங்கை அணி வென்றது.
2003-ம் ஆண்டு : வெற்றி
டர்பன் நகரில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிஆட்டத்தில் கென்யாவை எதிர்கொண்டது இந்திய அணி. கங்குலியின் சதத்தால் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்தது. ஜாகீர்கான், ஸ்ரீநாத், நெஹ்ரா ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 91 ரன்களில் தோல்விஅடைந்தது.
2011-ம் ஆண்டு: வரலாற்று வெற்றி
மொஹாலியில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. வஹாப் ரியாஸின் பந்துவீச்சில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தானில் மிஸ்பா உல்ஹக் மட்டுமே சிறப்பாக விளையாடய பாகிஸ்தான் அணி 29 ரன்களில் தோல்வி அடைந்தது.
2015-ம் ஆண்டு: ஆஸியிடம் தோல்வி
சிட்னியில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலிய அணிகளும் மோதின. ஸ்டீவ் ஸ்மித் 105, பிஞ்ச் 81 ரன்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 328ரன்கள் சேர்த்தது. ஆனால் ஸ்டார்க், பாக்னர், ஆகியோரின் பந்துவீச்சால் இந்திய அணி 233 ரன்களில் சுருண்டது.