விளையாட்டு

ஹாங்காங் ஓபன்: காலிறுதியில் சாய்னா, ஸ்ரீகாந்த்

பிடிஐ

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்ரீகாந்த் 21-19, 23-21 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் டனாங்சக் சேயான்சம்பூன்சக்கை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 39 நிமிடங்களில் முடிந்தது.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் 21-16, 21-13 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பெய்வென் ஜங்கை வீழ்த்தினார். சாய்னா தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சீன தைபேவின் தாய் ஸு இங்கை சந்திக்கிறார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சர்வதேச தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பி.வி. சிந்து 17-21, 21-13, 11-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 48-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வி கண்டார். உலக சாம்பியன்ஷிப்பில் இரு வெண்கலப் பதக்கம் வென்றவரான சிந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நஜோமிக்கு எதிரான ஆட்டத்தில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் போனதால் தோல்வியிலிருந்து தப்பமுடியவில்லை.

SCROLL FOR NEXT