விளையாட்டு

பிளிஸ்கோவா முதலிடம்

செய்திப்பிரிவு

மகளிர் டென்னிஸ் உலகத் தரவரிசை பட்டியலில் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா முதலிடம் பிடித்துள்ளார்.

25 வயதான அவர், இதுவரை ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் கூட வெல்லாத நிலையில் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்து ஆச்சர்யம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டி வரையும், இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் அரை இறுதி வரையும் முன்னேற்றம் கண்டிருந்தார். கரோலினா பிளிஸ்கோவா. மேலும் அவர் இந்த ஆண்டில் பிரிஸ்பன், தோகா, ஈஸ்ட்போர்ன் தொடர்களில் கோப்பை வென்றிருந்தார்.

விம்பிள்டன் தொடரின் கால் இறுதியில் 2-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் தோல்வியடைந்ததால் கரோலினா பிளிஸ்கோவா 3-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். சிமோனா ஹாலப் 2-வது இடத்திலேயே நீடிக்கிறார். முதலிடத்தில் இருந்த ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். விம்பிள்டனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 14-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஜோகன்னா ஹோன்டா (இங்கிலாந்து), கார்பைன் முகுருசா (ஸ்பெயின்), ஸ்விட்டோலினா (உக்ரைன்), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), சுவெட்லனா குஸ்நெட்சோவா (ரஷ்யா), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா (போலந்து) ஆகியோர் முறையே 4 முதல் 10-வது இடங்களில் உள்ளனர். -ஏஎப்பி

SCROLL FOR NEXT