பாரா ஒலிம்பிக்கில் கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்திருந்தார். இந்நிலையில் இதே மாவட்டத்தில் இருந்து 25 வயதான கபடி வீரரான செல்வமணி, தனது திறமையால் தற்போது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
ஓமலூர் பகுதியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேக்கம்பட்டி என்ற சிறிய கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் தான் இந்த செல்வமணி. ஹைதராபாத் ரயில்வேயில் கிளார்க்காக பணியாற்றி வரும் இவர் இளம் வயது முதலே கபடியில் சிறந்த திறன் உடையவராக வலம் வந்துள்ளார்.
9-ம் வகுப்பு படிக்கும் போது பள்ளிகள் அளவிலான கபடி போட்டி களில் விளையாடி வந்துள்ளார். சிறந்த ரெய்டரான அவர், சேலத்தில் உள்ள சிஎஸ்ஐ பாலிடெக்னிக்கில் மெக்கானிக் கல் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்ததும் கல்லூரி அணிகள் இடையிலான போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறனை மேலும் மெருகேற்றினார். இறுதி ஆண்டு படிக்கும்போது தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
‘டூ ஆர் டை' ரெய்டு (ஆட்டத்தின் கடைசி நொடிகளில் ரெய்டு செல்வது) செல்வதில் சிறப்பு திறன் பெற்ற செல்வமணிக்கு கல்லூரி படிப்பை முடித்ததும் 2011-ல் விளையாட்டு பிரிவில் ராணுவத்தில் வேலை கிடைத் தது. பெங்களூருவில் ஹவில்தாராக பணியாற்றிய நிலையில் அந்த வேலையில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படவில்லை. மனம் முழுவதும் கபடி, சொந்த ஊர் நினைப்பு, பணிச் சுமை ஆகியவற்றால் அழுத்தத்தை உணர்ந்த செல்வமணி சில மாதங்களிலேயே ராணுவ வேலையை துறந்துவிட்டு தேக்கம்பட்டிக்கே திரும்பி வந்தார்.
வேலையை விட்டு வந்த செல்வமணி யை அவரது தந்தை கடிந்து கொண்டார். மகனின் கஷ்டங்களை உணர்ந்த தாய் அரவணைத்தார். இதையடுத்து இரு வருடங்கள் பெற்றோருடன் சேர்ந்து செல்வமணி விவசாயம் பார்க்கத் தொடங்கினார். அதேவேளையில் கபடி தான் தனது வாழ்க்கை என்ற மூச்சுடன் அதில் அதிக முனைப்பு காட்டினார்.
இதன் விளைவாக 2014-ம் ஆண்டு தமிழக அணிக்காக தேர்வானார். சிறந்த திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக விளையாட்டு பிரிவில் தென்னக ரெயில்வேயில் அவருக்கு கிளார்க் பணி தேடிவந்தது. பணியில் சேர்ந்தபடி தமிழக அணிக்காக கபடி போட்டிகளில் பங்கேற்று வந்த வருக்கு திடீரென புரோ கபடி லீக் தொடரின் வாயிலாக அதிர்ஷ்டம் எட்டிப் பார்ர்த்தது.
2014-ம் ஆண்டு இவரது மின்னல் வேக ரெய்டை பார்த்து புரோ கபடி லீக் தொடரின் டெல்லி அணி பயிற்சியாளர் பொன்னப்பா சற்று வியந்தார். இதையடுத்து அவரை அந்த சீசனில் டெல்லி அணி ரூ.2 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. 2 ஆட்டங்களில் மட்டுமே அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்த போதும் தனது முத்திரையை பதிக்க அவர் தவறவில்லை.
தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் ரெய்டு சென்று 4 புள்ளிகள் சேர்த்து ஆட்டத்தின் முடிவையே புரட்டிப் போட்டார். இதனால் அடுத்த சீசனிலும் டெல்லி அணி அவரை தக்கவைத்தது. இதுவரை 3 சீசன்களில் விளையாடி உள்ள செல்வமணி 31 ஆட்டங்களில் பங்கேற்று 222 முறை ரெய்டு சென்றுள்ளார். இவற்றில் 72 ரெய்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளன.
இதன் பலனாக அடுத்த மாதம் நடை பெற உள்ள புரோ கபடி லீக் தொடரின் 5-வது சீசனுக்காக செல்வமணியை ரூ.73 லட்சத்துக்கு ஏலம் எடுத்து ஜெய்ப்பூர் பாந்தர்ஸ் அணி வளைத்து போட்டுள்ளது. 3-வது சீசனில் ரூ.11 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பண மழையில் நனைக்கப்பட்டுள்ளார் செல்வமணி.
இந்நிலையில் புரோ கபடி லீக் 5-வது சீசன் தொடர்பாக மும்பையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்மணி தனது நினைவுகளை நம்மு டன் பகிர்ந்து கொண்டார். இனிமேல் அவர்.....
தேக்கம்பட்டியை சேர்ந்த நான் இன்று இந்த அளவுக்கு பிரபலமாகி உள்ளேன் என்றால் அது கபடியால் தான். ராணுவ வேலையை விட்டு வந்தவுடன் எனது பெற்றோர் வருத்தம் அடைந்தார்கள். எனினும் எனது தாய் எனக்கு ஆதரவளித்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக எனது தம்பி தினேஷ் குமார் எனக்காக படிப்பை தியாகம் செய்தான். நான் கபடி விளையாடுவதற்காக அவன் தனது படிப்பை 9-வது வகுப்புடன் நிறுத்திக் கொண்டு டிரைவர் வேலைக்கு சென்றான். எனது சுமையை அவன் தாங்கிக் கொண்டதால்தான் என்னால் கபடியில் எந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது.
புரோ கபடி லீக்கில் விளையாடத் தொடங்கியதும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ளேன். முதல் 3 சீசன்களிலும் கிடைத்த வருமானத்தை கொண்டு எங்களது வீட்டை சீரமைத் தேன். தற்போதும் ஓட்டு வீட்டில்தான் நாங்கள் குடியிருந்து வருகிறோம்.
விரைவில் பெரிய வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனது தங்கை ஒருவரும் உள்ளார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் எனது முயற்சியால் அவர் தற்போது எம்.பில் (முதுநிலை அறிஞர்) பட்டம் பயின்று வருகிறார். படிப்பு முடிவடைந்ததும் அவருக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசு வேலையில் விளை யாட்டு ஒதுக்கீடு தற்போது பெருமளவில் குறைந்து விட்டது. முன்பெல்லாம் கபடிக்கு 7 முதல் 8 துறைகளில் வேலை வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது சொற்ப துறைகளிலும் அதிலும் அரிதாகவே பணி வழங்கப்படுகிறது.
கபடியில் சிறந்து விளங்கும் என்னைப் போன்று மேலும் 4 தமிழக வீரர்கள் ஹைதராபாத் ரயில்வேயில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கடந்த உலகக் கோப்பையில் விளையாடிய சேரலாதன் தர்மராஜூம் அடங்குவார். தமிழக அரசு பணியில் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் தான் குடும்பத்தினரை விட்டு அடுத்த மாநிலத்தில் பணிபுரிகிறோம்.
உண்மையில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் விளையாட்டு ஒதுகீட்டில் பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கபடி வீரருக்கு உடல் தகுதியை பராமரிப்பது என்பது முக்கியமான விஷயம். புரோ கபடி லீக் விளையாட ஆரம்பித்த போதுதான் இந்த விஷயங் கள் குறித்து அதிகம் தெரிந்து கொண் டேன். தற்போது உணவு கட்டுப்பாட்டை அதிக கவனமுடன் கடைப்பிடிக்கிறேன்.
புரோ கபடி லீக்கில் நுழைய தேசிய அணிக்காக சிறந்த திறனை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். மேலும் புரோ கபடி லீக் பயிற்சி முகாமில் தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்தால் மட்டுமே நமக்கான இடத்தை பெற முடியும்.
இம்முறை புரோ கபடி லீக் தமிழக வீரர்கள் 24 பேர் பல்வேறு அணிகளில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 5 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. எனது ரோல் மாடல் வீரர் இந்திய அணியின் கேப்டன் அனுப் குமார்தான்.
தற்போது ஜெய்ப்பூர் அணிக்காக நட்சத்திர வீரரான மன்ஜித் சில்லார் தலைமையில் விளையாட உள்ளேன். 73 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள் ளதால் என் மீது அதிக நெருக்கடி உருவாகும் என நான் கருதவில்லை. எப்போதும் போன்றே சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். நிச்சயம் இம்முறை கோப்பையை வெல்ல முயற்சி செய்வோம். எனது பங்களிப்பும் அதில் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு செல்வமணி கூறினார்.