இந்தியாவில் பாட்மிண்டன் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது என்று பி.வி.சிந்து கூறியுள்ளார்.
இந்தியாவின் பிரபல பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கிளாஸ்கோ நகரில் அடுத்த மாதம் நடக்கவுள்ள உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக ஆட விரும்புகிறேன். இதில் பட்டம் வெல்வது கடினமான விஷயம் என்றாலும் அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
வாழ்க்கை மாறியுள்ளது
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பிறகு எனது வாழ்க்கை மாறியுள்ளது. இந்திய ரசிகர்கள் என்னிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முன்பைவிட கடுமையாக உழைக்க வேண்டி யுள்ளது. அதே நேரத்தில் எனக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க கோபிசந்த் போன்ற பயிற்சியாளர் கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம். அவரது வழிகாட்டுதலுக்கு நான் என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.
நம்பிக்கை உள்ளது
ஆண்களுக்கான பாட்மிண் டன் பிரிவில் சமீப காலமாக கிடாம்பி காந்த், சாய் பிரணீத் ஆகியோர் சிறப்பாக ஆடி வருகிறார்கள். அவர்களைப் போல் மேலும் பல வீரர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சமீப காலமாக இந்தியாவில் பாட்மிண்டன் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.