அமெரிக்காவின் வின்னேட்கா நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சாலஞ்சர் அளவிலானடென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
போட்டித் தரவரிசையில் 5-ம் நிலை வீரான ராம்குமார், அரை இறுதியில் 4-6, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் டாமி பாலை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 51 நிமிடங்கள் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ராம்குமார், ஜப்பானின் அகிரா சான்டிலானுடன் மோதுகிறார்.
கடந்த சில மாதங்களாக ராம்குமார் சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவர், அன்டல்யா ஓபனில் உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை வீழ்த்தியிருந்தார். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தலாஹாஸ்ஸி சாலஞ்சர் போட்டியில் ராம்குமார் இறுதிப் சுற்று வரை முன்னேற்றம் கண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ