விளையாட்டு

இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை

செய்திப்பிரிவு

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதியில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி இன்று மோதுகிறது.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 186 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியிருந்தது. 2-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தை இந்திய வீராங்கனைகள் சந்திக்கின்றனர். புள்ளி விவரங்கள் படி பார்த்தால் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்ததாக உள்ளது.

2013-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 4 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் கூட இந்தியாவுக்கு எதிராக 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெரிய அளவிலான வெற்றியை ஆஸ்திரேலிய அணி பதிவு செய்திருந்தது.

லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 ஆட்டங்களில் 6-ல் வெற்றி கண்டிருந்தது. அதேவேளையில் இந்திய அணி 5 வெற்றிகளைப் பெற்றிருந்தது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 23-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரை இறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் மிதாலி ராஜ் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி ரன்கள் குவித்து வருகிறார். பூனம் ராவத், ஹர்மான்பிரித் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி சர்மா ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்த்து வருகின்றனர். தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா முதல் இரு ஆட்டங்களிலும் முறையே 90 மற்றும் 106 ரன்கள் விளாசி மிரட்டினார்.

ஆனால் அடுத்த 5 ஆட்டங்களிலும் அவரால் முறையே 2, 8, 4, 3, 13 ரன்களே எடுக்க முடிந்தது. அவர் மீண்டும் பார்முக்கு திரும்பும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கும்.

மற்றொரு தொடக்க வீராங்கனையான பூனம் ராவத், லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்திருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

வேகப்பந்து வீச்சில் கோஸ்வாமி, ஷிகா பாண்டே ஆகியோரை நம்பியே இந்திய அணி உள்ளது. ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனைகளான நிக்கோலே போல்டன், பேத் மூனி ஆகியோர் இடது கை பேட்டிங் செய்பவர்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சு வீராங்கனையான ராஜேஷ்வரி கெய்க்வாட்டை தொடக்க ஓவர்களில் பயன்படுத்துவது குறித்து மிதாலி ராஜ் ஆலோசிக்கக்கூடும்.

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜேஷ்வரி 5 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் இந்திய சுழற்பந்து வீச்சு வீராங்கனைகள் இந்த தொடரில் 36 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி சுழற் பந்து வீச்சை துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் என கருதப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் கேப்டன் மெக் லானிங், தனி ஒருவராக ஆட்டத்தின் தன்மையை மாற்றும் திறன் கொண்டவராக திகழ்கிறார். லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக 76 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இன்றைய ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அவர் நெருக்கடி தரக்கூடும். நடுக்கள வரிசையில் எல்சி பலம் சேர்ப்பவராக உள்ளார்.

வேகப் பந்து வீச்சில் மீகன் ஸ்கட், ஆஷ்லேஹ் கார்ட்னர் ஆகியோர் இந்திய வீராங்கனைகளுக்கு சவால் தரக்கூடும். இதேபோல்கிர்ஸ்டென் பீம்ஸின் சுழற் பந்து வீச்சிலும் இந்திய வீராங்கனைகள் கவனமுடன் விளையாட வேண்டும். கடந்த ஆட்டத்தில் இவர் மிதாலி ராஜை ஆட்டமிழக்கச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT