ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டதன் மூலம் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது ஆஸ்திரேலியா.
தற்போதைய நிலையில் இந்திய அணியைவிட இரு புள்ளிகள் பின்தங்கியுள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய இரு போட்டிகளிலும் வெற்றி பெறும்பட்சத்தில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துவிடும். அதேநேரத்தில் அந்த இரு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுமானால் அந்த அணி மீண்டும் 2-வது இடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா 3-வது இடத்துக்கு தள்ளப்படும்.
கோலி 2-வது இடம்
பேட்டிங் தரவரிசையைப் பொறுத்தவரையில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 888 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் விராட் கோலி 862 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரரான ஆம்லா 845 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி 738 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், மேற்கிந்தியத் தீவுகளின் சுநீல் நரேன், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். இந்திய வீரர்களில் புவனேஸ்வர் குமார் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார். அவர் 641 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளார்.