பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்குர் அவருக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தீபக் மிஸ்ரா, கான்வில்கர் மற்றும் சந்திராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு தாக்குர் ஏற்கெனவே அனுப்பிய மன்னிப்புக் கடிதத்தை பரிசீலீக்கப் போவதில்லை என்று கூறியதோடு, புதிதாக ஒரு பக்கத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இது தொடர்பாக ஜூலை 14-ம் தேதி விசாரணை நடைபெறும் போது தாக்குர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதாவது அவ்வாறான மன்னிப்புக் கடிதத்தை ஏற்று அவதூறு வழக்கை முடிவுக்குக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் விருப்பம் தெரிவித்துள்ளது.
தாக்குர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் பி.எஸ்.பட்வாலியா, தன்னுடைய கட்சிக்காரர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க தயாராக இருப்பதாகவும், ஆனாலும் தன் மீது எந்த ஒரு தவறும் இல்லை என்பதை நிரூபிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த நினைக்கிறார் என்றும் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் சீர்திருத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் பிசிசிஐ-யின் தன்னாட்சியை ஐசிசி பறிக்குமா என்று அனுராக் தாக்குர் அப்போதைய ஐசிசி தலைவரிடம் கடிதம் கோரியதாக புகார் எழுந்தது. இது உச்ச நீதிமன்ற உத்தரவைப் புறக்கணிப்பதற்கான நடவடிக்கை என்று நீதிமன்றம் கருதி அவமதிப்புப் புகார் எழுப்பியுள்ளது.
இதனையடுத்தே ஜனவரி 2-ம் தேதி அனுராக் தாக்குர், செயல்ர் அஜய் ஷிர்கே ஆகியோரது பதவிகளை உச்ச நீதிமன்றம் பறித்து உத்தரவிட்டதோடு, புதிய கிரிக்கெட் நிர்வாகக் குழுவை நியமித்தது குறிப்பிடத்தக்கது.