விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் சோங்கா, விக்டோரியா அசரன்கா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 12-ம் நிலை வீரரான பிரான்சின் சோங்கா, 313-ம் நிலை வீரரான இத்தாலியின் சிமோன் போலேலியை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சோங்கா 6-1, 7-5, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
16-ம் நிலை வீரரான லக்சம்பர்க்கின் கில்லஸ் முல்லர், 215-ம் நிலை வீரரான செக் குடியரசின் லூக்காஸ் ரசோலை எதிர்கொண்டார். சுமார் 3 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் முல்லர் 7-5, 6-7, 4-6, 6-3, 9-7 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். 24-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சேம் குயரி 6-4, 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில், 54-ம் நிலை வீரரான ஜார்ஜியாவின் நிக்கோலஸ் பாசில்லாஷிவிலியை வீழ்த்தினார்.
19-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபேர்டோ பவுதிஸ்டா அகுட் 6-2, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில், 140-ம் நிலை வீரரான ஜெர்மனியின் பீட்டர் கோஜோவ்ஸ்கியை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் நடைபெற்றது.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீராங்கனையான சுலோவேக்கியாவின் டொமினிகா சிபுல்கோவா, 93-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை எதிர்த்து விளையாடினார். இதில் சிபுல்கோவா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெல்லாரசின் விக்டோரியா அசரன்கா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் 15-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவையும், ஜெர்மனியின் ஹீதர் வாட்சன் 6-0, 6-4 என்ற நேர் செட்டில் லத்வியாவின் அனஸ்டஸிஜா செவஸ்டோவாவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் கால் பதித்தனர்.
6-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டா, 58-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்கை எதிர்த்து விளையாடினார். சுமார் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் ஜோகன்னா ஹோன்டா 7-6, 4-6, 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.