36-வது பிறந்த தினம் காணும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நாயகன் தோனிக்கு சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் தங்களுக்கேயுரிய பாணியில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ட்விட்டரில் சேவாக், “இந்திய ரசிகர்களுக்கு எண்ணற்ற மகிழ்வுத் தருணங்களை அளித்த வீரருக்கு வாழ்த்துக்கள், ஹேப்பி பர்த் டே எம்எஸ்.டி, ஹெலிகாப்டர் மேலும் மேலும் பறந்து எங்கள் இதயங்களில் இறங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டகிராமில் யுவராஜ் சிங் பதிவிடும் போது, “மிஸ்டர் ஹெலிகாப்டருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். have a great day buddy, the cake awaits you #happybirthday #cakesmash” என்று பதிவிட்டுள்ளார்.
நடப்பு தொடரில் தோனி மிக அதிகமான பந்துகளில் அரைசதம் எடுத்து 16 ஆண்டுகாலத்தில் மிக மந்தமான அரைசதத்திற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் விக்கெட் கீப்பராக தோனி அப்பழுக்கற்றவராக இருக்கிறார், முக்கியக் கட்டங்களில் கேட்சை விடுவது, ஸ்டம்பிங்கை விடுவது என்று அவரிடம் குறைகள் காண முடியாது.
பேட்டிங்கில் அவர் தன் மனத்தடைகளைக் களைந்து சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொண்டால், அவரது மிகத்துல்லியமான விக்கெட் கீப்பிங் அவரை 2019 உலகக்கோப்பைக்கு இன்றியமையாத ஒருவராக மாற்றிவிடும் என்று பலரும் கருதுகின்றனர்.
சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஒவ்வொரு முறை களமிறங்கும் போது அதிக எதிர்ப்பார்ப்புகள் என்ற சுமையைத் தாங்கும் ஒரு வீரராகத் தோனி திகழ்கிறார்.