ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த 2 அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி கல்லே நகரில் நேற்று நடந்தது. டாஸில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மாத்யூஸ், முதலில் பீல்டிங் செய்யத் தீர்மானித்தார். முதல் போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோற்றதைத் தொடர்ந்து இலங்கை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. வனிது ஹசரங்கா என்ற ஆல்ரவுண்டர் அந்த அணியில் முதல் முறையாக சேர்க்கப்பட்டிருந்தார்.
முதலில் பேட்டிங் செய்த ஜிம் பாப்வே அணி, 33.4 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மசகட்சா 41 ரன்களும், வாலெர் 38 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் அறிமுக வீரரான ஹசரங்கா, அடுத்தடுத்து 3 பந்துகளில் 3 விக்கெட்களை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். 2.4 ஓவர்களை வீசிய அவர் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். மற்றொரு பந்து வீச்சாளரான சண்டகன், 10 ஓவர்களில் 52 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து ஆடவந்த இலங்கை அணி, 10 ரன்களில் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இருப்பினும் இதன்பிறகு ஜோடி சேர்ந்த டிக்வெல்லாவும் (35 ரன்கள்), உபுல் தரங்காவும் (75 ரன்கள்) சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 67 ரன்களைச் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ், கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 28 ரன்களை சேர்க்க, இலங்கை அணி 30.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கியது.