விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: கார்ல்சனுக்குப் பதிலடி கொடுப்பாரா ஆனந்த்? - இன்று 3-வது சுற்று

ச.ந.கண்ணன்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஆனந்த் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று நடக்கும் மூன்றாவது சுற்றில், ஆனந்த் எந்த விதத்தில் கார்ல்சனுக்குப் பதிலடி கொடுக்கப்போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

உலக செஸ் போட்டியின் முதல் ஆட்டம் டிரா ஆன நிலையில் இரண்டாம் ஆட்டத்தில் அற்புத மாக ஆடி ஜெயித்து 1.5-0.5 என்று முன்னிலை பெற்றிருக்கிறார் கார்ல்சன். போட்டியின் தொடக் கத்திலேயே கார்ல்சன் வெற்றி பெற்றிருப்பது ஆனந்தின் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதனால் அடுத்து வரும் எல்லா ஆட்டங் களிலும் கூடுதல் கவனத்துடன் ஆடவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஆனந்த்.

சென்ற வருடம் சென்னையில் நடந்த போட்டியில் முதல் நான்கு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. அதிலும் முதலிரண்டு ஆட்டங்கள் விரைவாக முடிந்தன. ஆனால் இந்தமுறை ஆனந்துக்கு அவ்வளவு சுலபமான தொடக்கம் அமையவில்லை.

முதல் சுற்றிலேயே ஆனந்த் தோற்றிருப்பார். ஆட்டத்தின் பெரும்பாலான சமயங்களில் கார்ல்சனின் ஆதிக்கம்தான் அதிகமாக இருந்தது. ஆனால், 44. Qh1 என்கிற நகர்த்தலில் தான் ஆனந்த் தப்பிப் பிழைத்தார். ஆட்டம் டிரா ஆனது. முதல் ஆட்டமே கடுமையான போராட்டமாக அமைந் ததால் இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த், தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க் கப்பட்டது.

ஆனால் கார்ல்சன் ஆரம்பத்திலிருந்தே சரியான திட்டத்துடன் ஆடினார். 14வது நகர்த்தலில் Ra3-யைக் கொண்டு வந்ததுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அதன்பிறகு கார்ல்சன் எவ்வளவு சீக்கிரம் வெல்லப்போகிறார், கார்ல்சனின் உத்திகளை ஆனந்த் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்கிற விதத்தில் கார்ல்சனுக்குச் சாதகமான நிலைமை உருவானது.

20வது நகர்த்தலில் 20...Bxf5 என்று ஆனந்த் ஆடியது அவர் நிச்சயம் தோற்கப்போகிறார் என்பதை உறுதிப்படுத்தியது. அதிலும் 34வது நகர்த்தலில் Qd2-க்குப் பதிலாக h5 என்று ஆடியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. தோல்வியின் விளிம்பில் நிற்கும் போது ஆனந்தால் எப்படி அப்படியொரு மோசமான நகர்த்தலை செயல்படுத்த முடிந்தது, உலக செஸ் போட்டியில் இதுபோன்ற பெரிய தவறைச் செய்யலாமா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. “18வது நகர்த்தலில் பிஷப்பை e6ல் நிறுத்தியது தவறு.

அதற்குப் பதிலாக Qf7 ஆடியிருக்கவேண்டும்.” என்று தோற்றபிறகு பேட்டி கொடுத்தார் ஆனந்த். கார்ல்சனும் ஆனந்தின் இந்தத் தவறை ஒப்புக்கொண்டார். தனது மோசமான 34வது நகர்த்தலைப் பற்றி ஆனந்த் கூறும்போது, “ஆட்டத்தில் மீண்டு வரக்கூடிய சமயத்தில் அப்படியொரு தவறை செய்துவிட்டேன்.” என்கிறார். அதே அதிர்ச்சி கார்ல்சனுக்கும் இருந்திருக்கிறது. “ஆனந்த் அப்படி ஆடியதைப் பார்த்து நானும் அதிர்ச்சியானேன். அந்த நகர்த்தல் உண்மைதானா என்று ஒன்றுக்கு இருமுறை பரிசோதித்துப் பார்த்தேன்.” என்கிறார். 23. Rc3 நகர்த்தலில் கார்ல்சன் ஆட்டத்தைத் தன் பக்கம் திருப்பி அதன்பிறகு ஆனந்த் தடுப்பாட்டம் மட்டுமே ஆடும்படியாக செய்தார். “வாரயிறுதியை வெற்றியோடு முடித்தது சந்தோஷம். இப்போது ஆனந்த் தான் என்னைப் பிடிக்கவேண்டும்” என்று குஷியுடன் பேசுகிறார்.

சென்னை மாதிரி இருக்காது, இந்த முறை ஆனந்த் ஃபார்மில் உள்ளார், கார்ல்சன் சில தோல்வி களைச் சந்தித்துள்ளார். எனவே போட்டி கடுமையாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த் தார்கள். ஆனால், முதலிரண்டு ஆட்டங்களைப் பார்க்கும்போது சென்னைப் போட்டியின் பிற்பாதி யில் கார்ல்சன் ஆடிய விதம் இங்கு தொடக்கத்திலேயே வந்துவிட்டதா என்று யோசிக்கவைக்கிறது.

சென்னையில் ஆனந்த் சந்தித்த தடுமாற்றங்கள் சூச்சியிலும் தொடர்வது ஆனந்த் ரசிகர்களைச் சோர்வடைய செய்துள்ளது. ஆனால், இன்னும் 10 ஆட்டங்கள் இருக்கின்றன. ஆனந்த் நிச்சயம் இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வருவார், அவர் சந்திக்காத சவால்கள் இல்லை, கேண்டிடேட்ஸில் எப்படி பிரமாதமாக ஆடினாரோ அப்படியொரு ஆட்டத்தை நிச்சயம் வெளிப்படுத்துவார் என்று ஆனந்த் மீது செஸ் உலகம் நம்பிக்கை வைத்துள்ளது. “இனிமேல், 2வது சுற்றில் ஆடியதைவிட நன்றாக ஆடவேண்டும்.” என்று ஆனந்தும் அடுத்தடுத்த ஆட்டங்களில் பொறுப்புடன் ஆடுவதற்கான உறுதியைக் கொடுத்திருக்கிறார். இன்று நடக்கும் மூன்றாவது ஆட்டத்தில் ஆனந்த் வெள்ளை நிறக் காய்களுடன் ஆட உள்ளார்.

SCROLL FOR NEXT