விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்- 4 மணி நேரம் போராடி பயஸ் ஜோடி தோல்வி

செய்திப்பிரிவு

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 136-ம் நிலை வீரரான செக் குடியரசின் ஆடம் பாவ்லஸ்கை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிச் 6-2, 6-2, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 34 நிமிடங்களில் முடிவடைந்தது.

13-ம் நிலை வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவ் 6-3, 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 65-ம் நிலை வீரரான சைப்ரஸ் நாட்டு வீரரான மார்க்கஸ் பகாதிஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 39-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் பெரரர், 61-ம் நிலை வீரரான பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸை எதிர்த்து விளையாடினார்.

ஜான் இஸ்னர்

இதில் பெரர் முதல் செட்டில் 3-0 என முன்னிலை வகித்த போது ஸ்டீவ் டார்சிஸ் காயம் காரணமாக வெளியேறினார். இதனால் பெரர் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 15-ம் நிலை வீரரான பிரான்சின் மோன்பில்ஸ் 7-6, 6-4, 6-4 என்ற செட்டில் 50-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் கைல் எட்மண்டை வீழ்த்தினார்.

23-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 7-6, 6-7, 7-5, 6-7, 3-6 என்ற செட் கணக்கில் 90-ம் நிலை வீரரான இஸ்ரேலின் டூடி செலாவிடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 51 நிமிடங்கள் நடைபெற்றது. 27-ம் நிலை வீரரான ஜெர்மனியின் மிச்சா ஜிவெரேவ் 6-1, 6-2, 2-6, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் 118-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் மிகைல் குஷ்கினை தோற்கடித்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 7-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் குஸ்நெட்சோவா, சகநாட்டை சேர்ந்த 47-ம் நிலை வீராங்கனையான கேத்ரினா மகரோவாவை 6-0, 7-5 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றில் கால் பதித்தார். 24-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ வான்டேவெஹ்கி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் 74-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் தத்ஜனா மரியாவை வீழ்த்தினார்.

10-ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, 60-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்காலேவை 5-7, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்றது.

பயஸ் ஜோடி தோல்வி

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், கனடாவின் சம்சுதீன் ஜோடி, ஆஸ்திரியாவின் ஜூலியன், பிலிப் ஓஸ்வால்டு ஜோடியை எதிர்த்து விளையாடியது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பயஸ் ஜோடி 6-4, 6-4, 2-6, 6-7, 8-10 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தது.

SCROLL FOR NEXT