விளையாட்டு

தோனி ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த்: சாம் பில்லிங்ஸ் புகழாரம்

இரா.முத்துக்குமார்

டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மென் ரிஷப் பந்த் மீது இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் புகழாரத்தை வீசியுள்ளார்.

தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இளம் வீரர் ரிஷப் பந்த் என்றும் தோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியில் இடம்பெற மிகுந்த பொருத்தமுடையவர் ரிஷப் பந்த் மட்டுமே என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து சாம் பில்லிங்ஸ் கூறியதாவது, “ரிஷப் பந்த் சந்தேகமின்றி மிகச்சிறந்த இந்திய இளம் வீரராவார். விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மெனாகவும் அவர் அபாரமாக திகழ்கிறார். விக்கெட் கீப்பிங்கில் தோனி போலவே ஸ்டம்புக்கு அருகில் நின்று கீப் செய்கிறார்.

எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு சிறந்த மாற்று வீரராக இந்திய அணியில் அவர் களமிறங்குவார் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை. இது மிகப்பெரிய வார்த்தைதான், ஆனால் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

கடந்த ஆண்டு அவர் பயிற்சியில் ஆடியதை நான் முதல் முறையாகப் பார்த்த போது அசந்து போனேன். கிறிஸ் மோரிஸ், நேதன் கூல்ட்டர் நீல் போன்ற பவுலர்களை அவர் அனாயசமாக டெல்லி மைதானத்தின் மேற்கூரைக்கு அடித்துக் கொண்டிருந்தார். அப்போது என் மனதில் ஓடிய எண்ணம் நினைவிருக்கிறது, ‘Jesus, this guy is (just) 19." என்றார் சாம் பில்லிங்ஸ்.

SCROLL FOR NEXT