மே.இ.தீவுகளின் ஆண்டிகுவா ஆல்ரவுண்டர் ரக்கீம் கார்ன்வால் என்ற வீரரின் உடல் எடை 140 கிலோ. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பிடித்தால் கிரிக்கெட் வரலாற்றில் அதிக உடல் எடைகொண்ட வீரராகத் திகழ்வார்.
ரக்கீம் கார்ன்வால் வயது 24 மட்டுமே என்பதும் கவனிக்கத்தக்கது.
இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் லீவர்ட் தீவுகள் அணிக்கு ஆடுகிறார், கரிபீயன் பிரிமியர் லீக் டி20 போட்டிகளில் ஆண்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் அணிக்கு ஆடுகிறார்.
இவர் ஒரு ஆஃப் ஸ்பின் ஆல் ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தர கிரிக்கெட்டில் 25 போட்டிகளில் 125 விக்கெட்டுகளை 24 என்ற சராசரியில் இவர் வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணி மே.இ.தீவுகள் மண்ணில் 3 ஒருநாள் போட்டிகளை விளையாடுவதற்காகச் சென்றுள்ளது. இதனையடுத்து டூர் மேட்ச் ஒன்றில் மே.இ.தீவுகள் வாரியத் தலைவர் அணிக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து ஆடியது. இந்தப் போட்டியில் கார்ன்வால் ஆடினார். மே.இ.தீவுகள் வாரியத் தலைவர் அணி 55/5 என்று தடுமாறிய போது களமிறங்கினார் கார்ன்வால்.
இங்கிலாந்தின் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களான பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷீத், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட், ஆகியோரை தனது பேட்டிங்கினால் விளாசித் தள்ளினார். 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் இவர் 61 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார். அணி எப்படியோ டீசண்டனான 233 ரன்களை 50 ஓவர்களில் எட்டியது.
இங்கிலாந்து இந்த இலக்கை 7 பந்துகள் மீதமிருக்கையில் கடந்து வென்றது வேறு விஷயம், ஆனால் பவுலிங்கில் வந்த கார்ன்வால் 10 ஓவர்கள் 1 மெய்டன் 39 ரன்கள் 1 விக்கெட் என்று அசத்தினார். இவரது பெரிய ஆகிருதி, ஆல்ரவுண்ட் திறமைகளினால் சமூக வலைத்தளங்களில் ஒரு ‘டாபிக்’ ஆக இவரது உடல் எடை வளையவருகிறது.
கடந்த முறை இந்தியா அங்கு சென்றிருந்த போது இதே வாரியத்தலைவர் அணிக்கு ஆடிய ’ஜெயண்ட்’ ரக்கீம் கார்ன்வால் 41 ரன்களை எடுத்ததோடு, புஜாரா, கோலி, ரஹானே உட்பட 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.
2007 உலகக்கோப்பையில் இத்தகைய கவனத்தை ஈர்த்த பெர்முடா அணி வீரர் டிவைன் லெவராக்கை பலரும் அதிசயத்துடன் பார்த்திருப்பார்கள், அவர் அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு ஸ்லிப்பில் பாய்ந்து பிடித்த கேட்சை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் லெவராக்கின் உடல் எடை அப்போது 122 கிலோதான்.
இப்போது 140 கிலோ எடையுடன் ரஹ்கீம் கார்ன்வால் பெர்முடா வீரரை விஞ்சிவிட்டார். கூடிய விரைவில் ஏதாவது ஒரு வடிவத்தில் இவர் மே.இ.தீவுகளுக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.