விளையாட்டு

‘லயன்’ மெஸ்ஸிக்கு 4 போட்டிகள் தடை: அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி

ஏஎஃப்பி

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு 4 போட்டிகள் விளையாட ஃபிபா தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலி அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் உதவி ரெஃப்ரீயை கடும் வார்த்தைகளால் வசை பாடிய குற்றச்சாட்டில் ஃபீபா இத்தடை உத்தரவை மெஸ்ஸிக்கு பிறப்பித்துள்ளது. மேலும் மெஸ்ஸிக்கு 10,000 சுவிஸ் பிராங்குகள் அபராதமும் விதிக்கப்பட்டது.

அர்ஜெண்டினா 1-0 என்று வெற்றி பெற்ற இந்தப் போட்டி கடந்த வியாழனன்று நடைபெற்றது. இந்த ஒரு கோலையும் பெனால்டியில் அடித்தது மெஸ்ஸியே.

மெஸ்ஸி இல்லாததால் அர்ஜென்டினா அணி நேற்று பொலிவியா அணிக்கு எதிரான உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி தழுவியது.

இதனையடுத்து மிக முக்கியப் போட்டிகளான உருகுவே, வெனிசூலா, பெரூ ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டின அணி களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உலகக்கோப்பை தகுதிச் சுற்றின் முக்கிய ஆட்டங்களில் மெஸ்ஸி விளையாட முடியாது போனது குறித்து அர்ஜெண்டின ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT