ஆஸ்திரேலியா - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. இப்போட்டி யில் இந்தியா ‘ஏ’ அணி வீரரான ஸ்ரேயாஷ் ஐயர் இரட்டை சதம் விளாசினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இந்தி யாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணி 23-ம் தேதி ஆடுகிறது. அதற்கு முன்னதாக இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியில் அந்த அணி ஆடியது. மும்பையில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 469 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இந்தியா ‘ஏ’ அணி, 2-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்திருந்தது. ஸ்ரேயாஷ் ஐயர் 85 ரன்களுடனும், பன்ட் 3 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ஆட்டத்தை தொடங்கிய இந்தியா ‘ஏ’ அணி, ஸ்ரேயாஷ் ஐயரின் மின்னல் வேக ஆட்டத்தால் வேக மாக ரன்களைக் குவித்தது.
210 பந்துகளில் 27 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 202 ரன்களைக் குவித்த ஸ்ரேயாஷ் ஐயர் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருக்கு உதவியாக கவுதம் 74 ரன்களையும், பன்ட் 21 ரன்களையும் குவிக்க, இந்தியா ‘ஏ’ அணி 403 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் லியான் 4 விக்கெட்களையும், ஓ’கெபி 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடவந்த ஆஸ்திரேலிய அணி நேற்று ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து ஆட்டம் டிராவில் முடிந்தது. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியில் ஹண்ட்ஸ்கம்ப் 37 ரன்களையும், வார்னர் 35 ரன்களையும் எடுத்தனர்.