விளையாட்டு

பந்துகள் திரும்பும் ஸ்பின் பிட்ச்களில் வீச எனக்குப் பிடிக்காது: யஜுவேந்திர சாஹல்

பிடிஐ

இங்கிலாந்துக்கு எதிராக டி20 சர்வதேச போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது முதல் தனக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளதாக உணர்வதாக ஆர்சிபி ஸ்பின்னர் சாஹல் தெரிவித்துள்ளார்.

“6 விக்கெட்டுகளை வீழ்த்தியது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. எனக்கு அதிக பொறுப்புகள் ஏற்பட்டுள்ளது, இன்னும் சொல்லப்போனால் அழுத்தம் கூட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இப்போது நான் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

பந்துகள் திரும்பும் பிட்ச்களில் வீச எனக்குப் பிடிக்காது, காரணம் நிறைய பந்துகள் பேட்ஸ்மெனின் மட்டையைக் கடந்துதான் செல்லும், மட்டை விக்கெட்டுகளில்தான் நாம் திட்டமிட முடியும். அதாவது மட்டை பிட்ச்களில்தான் எப்போது சறுக்கும் பந்துகளையோ, கூக்ளியையோ வீசலாம் என்று திட்டமிட முடியும். எனக்கு பிட்சில் பந்துகள் வேகமாக செல்லும் விதமாக இருப்பதே பிடிக்கும்.

மற்ற ஸ்பின்னர்களை ஒப்பிடும்போது ரிஸ்ட் ஸ்பின்னர்கள் வேறுபட்டவர்கள்.

சாமுவேல் பத்ரி பவர் பிளேயில் வீசுகிறார், அதனால் நான் நடுவில் வீசி வருகிறேன். பவன் நெகி 13-15வது ஓவர்களை வீச முடியும். கடந்த ஆண்டு பவர் பிளேயில் நான் மட்டுமேதான் வீசி வந்தேன். இப்போது பவர் பிளேயில் வீச 2 ஸ்பின்னர்கள் கிடைத்துள்ளனர்.

சுனில் நரைன் பேட்டிங் குறித்து...

யார் பேட்டிங் செய்தாலும் நான் கவலைப்படுவதில்லை, என் பலத்தைதான் நம்பியுள்ளேன். பிக்பாஷ் லீகில் நரைன் தொடக்கத்தில் இறங்கியது அனைவரும் அறிந்ததே. நான் அவருக்கு வீசும்போது முறையான பேட்ஸ்மெனாகவே கருதி வீசுவேன், டெய்ல் எண்டராக அல்ல.

ஈடன் கார்டன்சில் சில சமயங்களில் 160-170 ரன்கள் சரியானதாக இருக்கும். ஆனால் கொல்கத்தாவில் வெளிக்களம் வேகமானது. நேற்று இரவு மழை பெய்துள்ளதால் பனி, ஈரப்பதம் இருக்கும் எனவே 180-190 நல்ல ஸ்கோராக இருக்கும்” என்றார் சாஹல்.

SCROLL FOR NEXT