விளையாட்டு

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: 20 ஆண்டுக்குப் பிறகு கைப்பற்றுகிறது பாகிஸ்தான்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 460 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கையில் 6 விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால் அந்த அணியின் தோல்வி உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்றிருக்கும் பாகிஸ்தான் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 164 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 570 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் யூனிஸ்கான் 213, அசார் அலி 109, கேப்டன் மிஸ்பா உல் ஹக் 101 ரன்கள் எடுத்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 67.2 ஓவர்களில் 261 ரன்களுக்கு சுருண்டது.

முதல் இன்னிங்ஸில் 309 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 21 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி 21, யூனிஸ்கான் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் யூனிஸ்கான் 46 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் மிஸ்பா உல் ஹக் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்க அதிரடி ஆரம்பமானது. 4 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழப்பதிலிருந்து தப்பிப் பிழைத்த மிஸ்பா, ஸ்மித் ஓவரில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார். அவர் 21 பந்துகளில் அரைசதம் கண்டார்.

தொடர்ந்து வேகம் காட்டிய அவர் 56 பந்துகளில் சதமடிக்க, மறுமுனையில் அசார் அலி 174 பந்துகளில் சதத்தை எட்டினார். இதையடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது பாகிஸ்தான். அப்போது அந்த அணி 60.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது. மிஸ்பா 101, அசார் அலி 100 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா-143/4

603 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலியா 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 38, மிட்செல் மார்ஷ் 26 ரன்களுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக ரோஜர்ஸ் 2, மேக்ஸ்வெல் 4, கிளார்க் 5, வார்னர் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 460 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால் தோல்வி உறுதியாகியுள்ளது.

ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்தார் மிஸ்பா

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 56 பந்துகளில் சதமடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிவேக சதமடித்தவர் என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸுடன் பகிர்ந்து கொண்டார் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்.

களத்தில் நின்ற நேர அடிப்படையில் அதிவேக சதமடித்தவர்கள் வரிசையில் 2-வது இடத்தைப் பிடித்தார் மிஸ்பா. அவர் சதமடிக்க 74 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். ஆஸ்திரேலியாவின் ஜேக் கிரிகோரி 1921-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 70 நிமிடங்களில் சதமடித்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது.

டெஸ்ட் போட்டியில் அதிவேக அரை சதமடித்தவர் என்ற பெருமையையும் மிஸ்பா உல் ஹக் தட்டிச் சென்றார். மிஸ்பா 21 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். முன்னதாக 2005-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக காலிஸ் 24 பந்துகளில் அரைசதம் கண்டதே சாதனையாக இருந்தது. இதேபோல் நேர அடிப்படையில் (24 நிமிடம்) அதிவேக அரைசதம் கண்டவர் என்ற சாதனையும் மிஸ்பா வசமானது. முன்னதாக வங்கதேசத்தின் முகமது அஷ்ரபுல் 27 நிமிடங்களில் (இந்தியாவுக்கு எதிராக) அரைசதம் கண்டதே சாதனையாக இருந்தது.

SCROLL FOR NEXT