தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் முன்னிங்ஸில் 341 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் வில்லியம்சன் 130 ரன்கள் எடுத்தார்.
டுனிடின் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 308 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டீன் எல்கர் 140, டெம்பா பவுமா 64, டு பிளெஸ்ஸிஸ் 52 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிரன்ட் போல்ட் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 55 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. டாம் தலாம் 10, ஜீத் ராவல் 52, ஹென்றி நிக்கோல்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். வில்லியம்சன் 78, ஜீத்தன் படேல் 9 ரன்களுடன் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினார்கள்.
ஜீத்தன் படேல் 16 ரன்களிலும் அடுத்து களமிறங்கிய நீஷம் 7 ரன்களிலும் நடையை கட்டினர். சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 195 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் தனது 16-வது சதத்தை அடித்தார். 130 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.
இதை தொடர்ந்து களமிறங்கிய சாண்ட்னர் 4, வாட்லிங் 50, டிரன்ட் போல்ட் 2, வாக்னர் 32 ரன்களில் வெளியேற நியூஸிலாந்து அணி 114.3 ஓவர்களில் 341 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 5, பிலாண்டர், மோர்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது. ஸ்டீபன் குக் ரன் ஏதும் எடுக்காமல் டிரன்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். டீன் எல்கர் 12, ஹசிம் ஆம்லா 23 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
முன்னதாக தென் ஆப்பிரிக்க 6.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்திருந்த போது ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரியில் தீ விபத்து அபாய எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.