பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் சாம்பியன்ஸ் டிராபியில் தன்னால் இந்திய கேப்டன் விராட் கோலியை வீழ்த்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 4ம் தேதி மோதுகின்றன.
இதற்கு முன்பாக 4 முறை எதிர்கொண்டதில் கோலியை 3 முறை ஜுனைத் கான் வீழ்த்தியுள்ளார். மேலும் கோலிக்கு ஜுனைத் கான் 22 பந்துகளை வீசி 2 ரன்களையே கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியிருப்பதாவது:
நான் விராட் கோலிக்கு இதுவரை 4 முறை பந்து வீசியதில் 3 முறை வீழ்த்தியுள்ளேன். அவர் ஒரு அபாரமான ஆட்டக்காரர்தான், ஆனால் என் பந்து வீச்சுக்கு எதிராக அவர் சோபிக்கவில்லை.
எனவே இம்முறை அவருக்கு வீசும் போதும் என்னிடம் ஆட்டமிழந்த அதே கோலியாகவே பார்ப்பேன். நான் தவறாகக் கூட இருக்கலாம், அவரும் என்னை அதே ஜுனைத் கான் என்றே நினைப்பார் என்றே கருதுகிறேன். இதனால் அவர் என்னை எச்சரிக்கையாக ஆடவே முனைவார். இதனால் ஆட்டமிழப்பார்.
இந்திய ரசிகர்கள் முன்னிலையில் அவரை வீழ்த்தியுள்ளேன், அதனால் இங்கிலாந்தில் இம்முறை பிரச்சினையிருக்காது.
அவர் உலகம் முழுதும் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் அடித்து வருகிறார், ஆனால் இவை எதுவும் எனக்கு எதிராக நடக்கவில்லை. இது எனக்கு கிடைத்துள்ள மரியாதை, இதனை தக்க வைக்கவே முயற்சி செய்வேன்.
இருப்பினும் கோலி மட்டுமே இந்திய அணியில் சிறந்த வீரர் இல்லை. அனைத்து பேட்ஸ்மென்களும்தான் என் இலக்கு. நான் அவர்கள் ஆட்ட வீடியோவைப் பார்த்து என்னைத் தயார் செய்து கொண்டுள்ளேன்.
இவ்வாறு கூறியுள்ளார் ஜுனைத் கான்.