சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) கொடுத்த நெருக்கடியின் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) தனது சட்டவிதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மீதான தடை நீக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நிர்வாகிகள் தேர்தலில் உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனக்கூறி கடந்த டிசம்பரில் ஐஓஏவை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டது ஐஓசி. இதன்பிறகு ஐஓஏ மீதான தடையை நீக்குவதற்கு பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றவர்கள் ஐஓஏ தேர்தலில் போட்டியிடாத வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதில் ஐஓசி தீவிரமாக இருந்தது. ஆனால் ஐஓஏ தரப்போ இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனை பெற்றவர்கள் நன்னெறிக் குழுவை நாடி, வாய்ப்பிருக்கும் பட்சத்தில் தேர்தலில் போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.
அதை முற்றிலும் நிராகரித்த ஐஓசி, டிசம்பர் 10-ம் தேதிக்குள் தாங்கள் கூறியதுபோல சட்டத்திருத்தம் கொண்டு வராவிட்டால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தது. இதைத் தொடர்ந்து ஐஓஏவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ரகுநாதன் தலைமையில் 134 பேர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் ஐஓசி கூறியபடி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதுதொடர்பாக ரகுநாதன் கூறுகையில், “இந்த சட்டத் திருத்தத்துக்கு ஐஓசி ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் பிப்ரவரி 9-ம் தேதி ஐஓஏ நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐஓஏ தலைவர் அபய் சிங் சௌதாலா, செயலர் லலித் பனோட் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதால் அவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட முடியாது. நாங்கள் இருவரும் வரும் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என அவர்களே கூறிவிட்டனர்.
எங்களுக்கு சொல்லப்பட்டதை நாங்கள் செய்து விட்டோம். இனி ஐஓசிதான் முடிவெடுக்க வேண்டும். இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என நம்புகிறோம்” என்றார்.