விளையாட்டு

அசார் அலியின் நண்பர்கள் பாக். ஓய்வறையில் உள்ளனர்: ஸ்மித்தை எச்சரித்த மைக்கேல் கிளார்க்

செய்திப்பிரிவு

சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் மைக்கேல் கிளார்க் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் ஆடி வந்த போது, பேட்ஸ்மென் அசார் அலியுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஏதோ உரையாடியுள்ளார்.

அதனைத் தவறாகப் புரிந்து கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஸ்மித்தை அழைத்து, ‘அசார் அலியின் நண்பர்கள் பாக். ஓய்வறையில் உள்ளனர். களத்தில் நட்பு தேவையில்லை’ என்று எச்சரித்ததாக ஆஸ்திரேலிய ஊடகச் செய்தி ஒன்று கூறியுள்ளது.

கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது செய்கையை தவறாகப் புரிந்து கொண்டார் என்று ஸ்மித் பெர்த் நகரில் செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார்:

"நான் அசார் அலியை ஆஸ்திரேலிய பாணி ‘ஸ்லெட்ஜிங்’ செய்தேன். நான் நட்பு ரீதியாக உரையாடவில்லை. களத்தில் ஆக்ரோஷம் காட்டுவதுதான் எங்களது வழிமுறை. நாங்கள் கிரிக்கெட்டை அப்படித்தான் விளையாடிப் பழகியுள்ளோம், எனவே தொடர்ந்து அப்படியேதான் செயலாற்றுவோம்.

இந்தியாவுக்கு எதிரான தொடர் மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவில் மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. பவுன்ஸ் இல்லாத பிட்ச்களிலிருந்து பவுன்ஸ் உள்ள, எங்களுக்கு பழகிய பிட்ச்களில் ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் ஸ்மித்.

ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரம், முன்னதாக மைக்கேல் கிளார்க்-ஜேம்ஸ் ஆண்டர்சன் விவகாரம் என்று களத்தில் வீரர்கள் பலர் எல்லை மீறி எதிரணியினரை இழிவு படுத்தி வருகின்றனர்.

நடத்தை விவகாரத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்ற குரல்கள் எழுந்து வரும் நிலையில் ஐசிசி. இதனை கவனிக்குமா?

SCROLL FOR NEXT