பஞ்சாபில் வரும் 30-ம் தேதி முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ள 4-வது உலகக் கோப்பை கபடி போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த மகளிர் அணியும் பங்கேற்கிறது.
இது தொடர்பாக போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவரும், பஞ்சாப் மாநில துணை முதல்வருமான சுக்பிர் சிங் பாதல் கூறியது:
ஆடவர் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், இங்கிலாந்து, ஸ்பெயின், டென்மார்க், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, கனடா, ஆர்ஜென்டீனா, சியரா லியோன், கென்யா ஆகிய 12 அணிகளும், மகளிர் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், டென்மார்க், அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்ஸிகோ, கென்யா, நியூஸிலாந்து ஆகிய 8 அணிகளும் பங்கேற்கின்றன.
ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.2 கோடியும் 2 மற்றும் 3-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 கோடி மற்றும் 51 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மகளிர் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.1 கோடியும் 2 மற்றும் 3-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.51 லட்சமும் ரூ.25 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
பதின்டா, லூதியானா, பாட்டியாலா, அமிர்தசரஸ், ஜலந்தர் உள்ளிட்ட பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் போட்டி நடைபெறும். ஊக்கமருந்து இல்லாத போட்டியை நடத்தும் வகையில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு உள்பட்ட ஊக்கமருந்து கமிட்டியினர் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளிடம் ஊக்கமருந்து சோதனை நடத்துவார்கள்.
போட்டிக்கான மொத்த பட்ஜெட் ரூ.20 கோடியாகும். தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கான பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவு ரூ.6 கோடியாகும். தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், நிறைவு விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் பங்கேற்கிறார்கள்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், ஆசிய அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த முயற்சி எடுக்கப்படும் என்றார்.