விளையாட்டு

ஆஸி.க்கு மீண்டும் வெற்றி: நான்காவது ஆஷஸ் டெஸ்ட்டையும் வென்றது

செய்திப்பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 255 ரன்களும், ஆஸ்திரேலியா 204 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தன. பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 179 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 231 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் ரோஜர்ஸ் 18, டேவிட் வார்னர் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

ரோஜர்ஸ் சதம்

4-வது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 64 ரன்களை எட்டியபோது வார்னரின் விக்கெட்டை இழந்தது. 47 பந்துகளைச் சந்தித்த வார்னர் 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஷேன் வாட்சன் களம்புகுந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றது. கிறிஸ் ரோஜர்ஸ் 135 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இந்தத் தொடரில் அவர் அடித்த முதல் சதம் இது. ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 2-வது சதம்.

வாட்சன் 83*

ரோஜர்ஸைத் தொடர்ந்து வாட்சன் 70 பந்துகளில் அரைசதம் கண்டார். ஆஸ்திரேலியா 200 ரன்களை எட்டியபோது ரோஜர்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 116 ரன்கள் எடுத்தார். இதையடுத்து கேப்டன் மைக்கேல் கிளார்க் களம்புகுந்தார். ஷேன் வாட்சன் அதிரடியில் இறங்க, 51.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. வாட்சன் 90 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 83, மைக்கேல் கிளார்க் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மிட்செல் ஜான்சன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

51 ஆண்டுகளில்…

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 231 ரன்கள் எடுத்து வெற்றி கண்டதே மெல்போர்ன் மைதானத்தில் கடந்த 51 ஆண்டுகளில் (1962-63-க்குப் பிறகு) நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தலைசிறந்த 4-வது இன்னிங்ஸ் சேஸிங் வெற்றியாகும்.

மைக்கேல் கிளார்க் 8,000

இந்தப் போட்டியின் 4-வது இன்னிங்ஸில் 3 ரன்கள் எடுத்தபோது 8 ஆயிரம் ரன்களை எட்டினார் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க். தனது 101-வது டெஸ்ட் போட்டியில் 172-வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார் கிளார்க். 8 ஆயிரம் ரன்கள் எடுத்த 6-வது ஆஸ்திரேலியரான கிளார்க், குறைந்த இன்னிங்ஸ்களில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய ஆஸ்திரேலியர்கள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளார். மேத்யூ ஹேடன் (164 இன்னிங்ஸ்), ரிக்கி பாண்டிங் (165 இன்னிங்ஸ்) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

SCROLL FOR NEXT