விளையாட்டு

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி: ராம்குமாரை எளிதாக வீழ்த்தினார் யூகி பாம்ப்ரி- மரின் சிலிச் இன்று களமிறங்குகிறார்

செய்திப்பிரிவு

தெற்காசியாவின் ஒரே ஏடிபி தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் 2-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 70-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்சியா லோபஸ், 101-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் அல்ஜாஸ் பெடனுடன் மோதினார். சுமார் 1 மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல்ஜாஸ் பெடன் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 18 வயதான இளம் வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடு, 83-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் ரென்சோ ஆலிவோவிடம் 6-7, 2-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

வைல்டு கார்டு மூலம் பங்கேற்ற இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் தனது முதல் சுற்றில் சகநாட்டை சேர்ந்த வீரரான யூகி பாம்ப்ரியுடன் மோதினார். இதில் யூகி பாம்ப்ரி 6-1, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார்.

இந்த ஆட்டம் 52 நிமிடங்களில் முடிவடைந்தது. தரவரிசை பட்டியலில் 227-வது இடத்தில் உள்ள ராம்குமார் கடந்த ஆண்டு கால் இறுதி வரை முன்னேறிய நிலையில் இந்த ஆண்டு முதல் சுற்றுடன் வெளியேறினார்.

போட்டி தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரான்சின் முன்னணி வீரரான பெனோயிட் பேர் தனது முதல் சுற்றில் ரஷ்யாவின் கிரவ்சவுக் கான்ஸ்டான்டினை சந்தித்தார். இதில் 84-வது இடத்தில் உள்ள கிரவ்சவுக்கை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்திய பெனோயிட் பேர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் சீன தைபேவின் யன் சன் லு 6-2, 6-1 என்ற நேர் செட்டில் மால்டாவின் அல்போட் ராடை தோற்கடித்தார்.

இன்று களமிறங்கும் மரின் சிலிச்

போட்டியின் 3-வது நாளான இன்று நட்சத்திர வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் களமிறங்குகிறார். போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அவருக்கு முதல் சுற்றில் பை வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேரடியாக 2-வது சுற்றை சந்திக்கும் மரின் சிலிச் இன்று மாலை 5 மணிக்கு பிரதான கோர்ட்டில் நடைபெறும் ஆட்டத்தில் தகுதி நிலை வீரரான ஜோசப் கோவிலக்குடன் மோதுகிறார்.

மரின் சிலிச் கடந்த 2009 மற்றும் 2010-ம் ஆண்டு சென்னை ஓபனில் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நேரத்தில் கோர்ட் 1-ல் நடைபெறும் ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஆல்பர்ட் ரமோஸ் தனது 2-வது சுற்றில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸூடன் மோதுகிறார்.

இரட்டையர் பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங் களில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ் செழியன் ஜோடி தங்களது முதல் சுற்றில் பிரேசிலின் மார்செலோ டெமோலைனர் - குரேஷியாவின் நிக்கோலா மெக்டிக் ஜோடியுடன் மோதுகிறது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாகேத் மைனேனி - ராம்குமார் ஜோடி பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸ் - பிரான்சின் பெனோயிட் பேர் ஜோடியை சந்திக்கிறது. இந்தியாவின் லியான்டர் பயஸ், பிரேசிலின் ஆண்ட்ரே சா ஜோடி தனது முதல் சுற்றில் இந்தியாவின் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடியுடன் மோதுகிறது.

SCROLL FOR NEXT