விளையாட்டு

கனரக மட்டையுடன் இந்திய ‘சுழற்பந்து வீச்சை’ ஆதிக்கம் செலுத்த வார்னர் கடும் பயிற்சி

இரா.முத்துக்குமார்

துணைக்கண்டத்தின் ‘குறைந்த பவுன்ஸ்’, ‘சுழற்பந்து வீச்சு’ ஆகியவற்றை ஆதிக்கம் செலுத்த கனரக மட்டையைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர்.

இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, டேவிட் வார்னர் வழக்கமாக 1.23 கிலோ எடைகொண்ட மட்டையைத்தான் பயன்படுத்தி வருகிறார். ஆனால் இம்முறை இந்தியாவுக்கு எதிராக 1.28 கிலோ எடை கொண்ட மட்டையுடன் களமிறங்க வார்னர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது இந்தப் பத்திரிகை.

ஆனால் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தன்னுடைய வழக்கமான மட்டையுடன் களமிறங்குவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. வார்னர் தனது வழக்கமான 1.23 கிலோ எடை கொண்ட கிரே-நிகோல்ஸ் காபூம் மட்டையின் எடை கூடுதலான மட்டையை இம்முறை பயன்படுத்தவுள்ளார்.

2013-ல் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராக தோனியின் தலைமையின் கீழ் 0-4 என்று ஒயிட்வாஷ் ஆனது. அப்போது வார்னரின் சராசரி 24.37 மட்டுமே.

ஐபிஎல் கிரிக்கெட்டில் பல்வேறு மைதானங்களில் வார்னருக்கு அனுபவம் இருந்தாலும் அஸ்வின், ஜடேஜா சுழலை டெஸ்ட் போட்டிகளில் நெருக்கமான களவியூகத்தில் திரும்பும் பிட்ச்களில் வார்னரின் அனுபவம் இம்முறை கைகொடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணி விரும்புகிறது.

வார்னர் அபாரமான ஃபார்மில் இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து முடிந்த தொடரில் 2 சதங்களை விளாசினார், இதில் அதிவேக சதம் ஒன்றை முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளைக்கு முன் விளாசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது, மேலும் ஒரு அதிரடி அரைசதமும் வார்னரை ஒரு அச்சுறுத்தும் தொடக்க வீரராக மாற்றியுள்ளது. முன்னதாக நியூஸிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசினார் வார்னர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வார்னர் பொறியில் சிக்கவைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார். ஆனால் பாகிஸ்தானின் மோசமான பீல்டிங், மிஸ்பாவின் மோசமான கேப்டன்சியினால் வார்னர் மீண்டும் அதிரடி வழிக்குத் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் கனரக மட்டையுடன் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை எதிர்கொள்ள அவர் தயாராகி வருவதாக ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT