நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வலுவான நிலையை எட்டியுள்ளது. முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து, தனது 2-வது இன்னிங்ஸில் 167 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 156 ஓவர்களில் 403 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 109 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்திருந்தது. சர்ஃப்ராஸ் அஹமது 28, யாசிர் ஷா ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான், 3-வது ஓவரிலேயே யாசிர் ஷாவின் விக்கெட்டை இழந்தது. அவர் 2 ரன்னுடன் வெளியேற, பின்னர் வந்த இஷான் அடில் ரன் ஏதுமின்றியும், ஜல்பிகர் பாபர் 5 ரன்களிலும் வெளியேற, 119 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான்.
சர்ஃப்ராஸ் சதம்
இதையடுத்து ரஹட் அலி களம்புகுந்தார். ரஹட் அலி ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில அசத்தலாக ஆடிய சர்ஃப்ராஸ் 153 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் ஒரே ஆண்டில் 3 சதமடித்த முதல் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
பந்துவீச்சாளர்களை கடுப்பேற்றிய பாகிஸ்தான் ஜோடியை மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிரித்தார் நியூஸிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம். அவர் தனது 2-வது ஓவரில் சர்ப்ராஸை வீழ்த்தி, பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸை 147 ஓவர்களில் 393 ரன்களுக்கு முடிவுக்கு கொண்டு வந்தார். இதன்மூலம் தனது 89-வது போட்டியில் முதல் விக்கெட்டை கைப்பற்றியிருக்கிறார் மெக்கல்லம்.
சர்ஃப்ராஸ் 195 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்தார். ரஹட் அலி 49 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்ஃப்ராஸ்-ரஹட் அலி ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
நியூஸிலாந்து தடுமாற்றம்
முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து, பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சரிவுக்குள்ளானது. தொடக்க ஆட்டக்காரர் லேத்தம் 9, பின்னர் வந்த வில்லியம்சன் 11, கேப்டன் மெக்கல்லம் 45, ஆண்டர்சன் 0, ஜேம்ஸ் நீஷம் 11, வாட்லிங் 11 என அடுத்தடுத்து வெளியேறினர்.
எனினும் மறுமுனையில் ராஸ் டெய்லர் அசத்தலாக ஆடி ரன் சேர்த்ததால் அந்த அணி மோசமான சரிவிலிருந்து மீண்டது. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 48.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. டெய்லர் 77 ரன்களுடனும், கிரேக் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஜல்பிகர் பாபர், யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போதைய நிலையில் நியூஸிலாந்து 177 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இன்று காலையில் நியூஸிலாந்தின் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்தும்பட்சத்தில் இந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிடும்.