மேற்கிந்தியத்தீவுகளைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷேன் ஷில்லிங்போர்டுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தடை விதித்துள்ளது.
ஐசிசி நடத்திய பயோமெக்கானிக்கல் சோதனையில் அவர் பந்து வீசும் முறை விதிகளுக்கு மாறானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் பந்து வீச தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
ஆஃப் ஸ்பின்னரான ஷில்லிங்போர்ட், தூஸ்ரா, ஆஃப் பிரேக் முறையில் பந்து வீசும்போது அவரது முழங்கை 15 டிகிரிக்கும் அதிகமாக வளைகிறது. ஐசிசி விதிகளின்படி இந்தமுறைகளில் பந்து வீசும்போது முழங்கை 15 டிகிரிக்கு மேல் செல்லக் கூடாது. எனவே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத்தீவுகளைச் சேர்ந்த மற்றொரு பந்துவீச்சாளர் மார்லான் சாமுவேல்ஸ் பந்து வீசும் முறையையும் ஐசிசி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் சாதாரணமாக ஆஃப் பிரேக் பந்து வீசும்போது விதிகளுக்கு உட்பட்டதாக இருப்பதாகவும், அதே நேரத்தில் சற்று வேகமாக பந்துவீசும்போது அது விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர் சாதாரணமாக ஆஃப் பிரேக் முறையில் மட்டும் பந்து வீச வேண்டும். அதே முறையில் வேகமாக பந்து வீசக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர் இதை மீறும்பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட 2 ஆண்டுகள் வரை தடைவிதிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.