இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்து வரும் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் 5 ஓவர்களில் தொடர்ந்து 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்ததுதான் இந்த போட்டியின் முக்கிய அம்சமாக அமைந்தது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 3-வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. இதில் முதல் 5 ஓவர்களில் 20 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி புதிய சாதனையை படைத்தது.
முதல் ஓவரின் 5-வது பந்தில் ரபாடா முதல் விக்கெட்டை வீழ்த்த, அடுத்த ஓவரில் பார்னெல் 2-வது விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து 4-வது ஓவரில் ஒரு விக்கெட், 5-வது ஓவரில் 3 விக்கெட் என சரிய 20 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.
ஒருநாள் போட்டி வரலாற்றிலேயே ஒரு அணியின் முதல் 6 விக்கெட்டுகள் இவ்வளவு வேகமாக விழுவது இதுதான் முதல்முறை.
தொடர்ந்து வைலியும், பேர்ஸ்டோவும் சுதாரித்து விக்கெட் இழப்பின்றி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஸ்கோர் 82 ஆக இருந்தபோது வைலி (26 ரன்கள்), பார்னெலின் வேகத்தில் ஆட்டமிழந்தார்.
பிறகு பேர்ஸ்டோவுடன் இணைந்து ரோலாண்ட் ஜோன்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
சிறப்பாக ஆடிவந்த பேர்ஸ்டோ அரை சதம் கடந்தார். ஆனால் அவரும் அடுத்த சில ஓவர்களில் மஹாராஜின் சுழலுக்கு வீழ்ந்தார் (51 ரன்கள்). தொடர்ந்து பால் 7 ரன்கள், ஃபின் 3 ரன்கள் என ஆட்டமிழக்க 31.1 ஓவர்களில் 153 ரன்களுக்கு இங்கிலாந்து அணி தனது பேட்டிங்கை நிறைவு செய்தது. ரோலண்ட் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்திருந்தார்.
20 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து 153 ரன்கள் என்பதே இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கும்.
இங்கிலாந்து அணியின் கடந்த 11 போட்டிகளில், 1 போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் அந்த அணி 300 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது. அந்த 1 போட்டியிலும் 296 ரன்களை இங்கிலாந்து எடுத்தது.