இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரால் இலங்கை அணி உலகக் கோப்பை போட்டிக்கு தயாராவது பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளே பொறுப்பு என அந்த அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் படுதோல்வி கண்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை அணியின் தோல்வி தொடர்பாக வீரர்கள் மீது குற்றம்சாட்ட மறுத்த ரணதுங்கா மேலும் கூறியதாவது:
இலங்கை அணி இதுவரை மோசமாக விளையாடி படுதோல்வியை சந்தித்திருப்பதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம், விளையாட்டு அமைச்சகம், தேர்வுக் குழு தலைவர் ஜெயசூர்யா, பயிற்சியாளர் அட்டப்பட்டு, கேப்டன் மேத்யூஸ் ஆகியோரே பொறுப்பு. இந்திய கிரிக்கெட் வாரியத்தை திருப்திப்படுத்த முயற்சித்து இலங்கை கிரிக்கெட் அணியை மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கிறார்கள்.
உலகக் கோப்பை போட்டிக்காக தயாராகி வரும் இலங்கை அணிக்கு, இந்தியாவுடான கிரிக்கெட் தொடர் பயனுள்ளதாக அமையும் என ஜெயசூர்யாவும், அட்டப்பட்டும் அனைவரையும் நம்பவைத்தார்கள். ஆனால் அது தவறு என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா-இலங்கை இடையிலான தொடர் இறுதி செய்யப்பட்டபோது இலங்கை வீரர்கள் உடற்தகுதி தொடர்பான பயிற்சி முகாமில் இருந்தது அனைவருக்கும் தெரியும். மோசமான திட்டமிடலால் இப்போது படுதோல்வியை சந்தித்திருக்கிறது இலங்கை அணி” என்றார்.
ரணதுங்காவின் சகோதரர் நிஷந்தா ரணதுங்காதான் இலங்கை வாரியத்தின் செயலா ளராக இருக்கிறார். இந்தியா-இலங்கை தொடர் குறித்து நிஷாந்தா தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் நிஷந் தாவோ, “செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்தே இந்தியா-இலங்கை தொடரை இறுதி செய்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.