சுமார் 30-35 ஆண்டுகளாக மின்சாரம் காணாத ஹாக்கி வீரர் யுவராஜ் வால்மீகி வீட்டுக்கு 3 மணி நேரத்தில் மின்சாரம் பெற்றுத் தந்த நிகழ்வை முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
இந்திய ஹாக்கி வீரர் யுவராஜ் வால்மீகி வசித்து வந்த மும்பை வீட்டில் சுமார் 30-35 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை, இந்நிலையில் அப்போதைய மகாராஷ்டிர அமைச்சரவையில் இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரைச் சந்தித்து யுவராஜ் வால்மீகி வீட்டுக்கு மின்சாரம் பெற்றுத் தந்ததை நினைவு கூர்ந்தார் முன்னாள் இந்திய ஹாக்கி நட்சத்திரம் தன்ராஜ் பிள்ளை.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தன்ராஜ் பிள்ளை கூறியதாவது:
நான் இப்போதுதான் இதனை முதன் முறையாக இதனை தெரிவிக்கிறேன். யுவராஜ் வால்மீகி வீட்டில் 30-35 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை. அப்போது அஜித் பவார் மகாராஷ்டிர அரசில் இருந்தார். நான் யுவராஜ் வால்மீகியுடன் அஜித் பவாரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றேன். சந்திப்பு முடிந்து 3 மணி நேரத்தில் யுவராஜ் வால்மீகி வீட்டுக்கு மின்வசதி அளிக்கப்பட்டது.
இவ்வாறு கூறினார் தன்ராஜ் பிள்ளை.
ஹாக்கி வீரர் யுவராஜ் வால்மீகி ஏழ்மையான பின்னணியிலிருந்து திறமையால் இந்திய அணிக்கு விளையாடும் அளவுக்கு உயர்ந்தார். 2014 உலகக்கோப்பையில் யுவராஜ் வால்மீகி ஆடினார்.
இவரது சகோதரர் தேவிந்தர் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.