106 ரன்கள் போன்ற குறைந்த இலக்கிற்கெல்லாம் 30-40 ரன்களை விரைவு கதியில் எடுக்க வேண்டும் என்று பொறுப்பு கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்தார்.
இன்று அவர் களமிறங்கி கமின்ஸ் சவாலை அடித்து நொறுக்கி எதிர்கொண்டார், அதுவும் மிட்விக்கெட்டில் அடித்த சிக்ஸ், பிறகு ஒதுங்கிக் கொண்டு கவரில் அடித்த சிக்ஸ் ஆகியவை கமின்ஸை நிலைகுலையச் செய்தன.
இந்நிலையில் அவர் ஆட்டம் முடிந்த பிறகு கூறியதாவது:
அனைவருக்கும் பாராட்டுக்கள். வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன். இந்தத் தொடர் மட்டுமல்ல, இந்த சீசனில அடிய அனைவருமே அபாரமாக ஆடினர். கேப்டனாக மனநிறைவான வெற்றி இது. அனைவருமே சிறப்பாக ஆடியதாகவே கருதுகிறேன்.
முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது அவர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தோம். ஸ்மித்,வார்னர்தான் ரன் எடுக்கின்றனர் எனவே ஒரு விக்கெட்டைச் சாய்த்து விட்டால் அவர்கள் மீது அழுத்தம் செலுத்த முடியும் என்று கருதினோம்.
குல்தீப் வீசிய அந்த ஸ்பெல் மறக்க முடியாதது. வலைப்பயிற்சிகளில் குல்தீப் யாதவ் அருமையாக வீசினார், அவரிடம் ஒரு இனம்புரியாத பந்து வீச்சுத் தன்மை உள்ளது, அதைப் பயன் படுத்திக் கொள்ள திட்டமிட்டோம்.
குறைந்த ரன்களை இலக்காகக் கொண்ட போட்டிகளில் 30-40 ரன்களை விரைவில் எடுப்பது அவசியம். நாம் கால்லே டெஸ்ட் போட்டியில் தயங்கித் தயங்கி ஆடி தோல்வியில் முடிந்தது நினைவுக்கு வந்தது. அதனால்தான் இன்று அடித்து ஆடுவது என்ற முடிவெடுத்தேன். ஆஸ்திரேலியா அருமையான, சவாலான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது நல்ல பிட்ச், இதில் வேகம், ஸ்பின் இரண்டுமே நன்றாக எடுத்தது, பேட்டிங்கிலும் நாம் ஒழுங்காக நம்மை நிலைநிறுத்தினால் ரன்கள் அடிக்கக் கூடிய பிட்ச்தான்.
இவ்வாறு கூறினார் ரஹானே.