அனில் கும்ப்ளேவின் ஓராண்டுகால பயிற்சியாளர் பொறுப்பு முடிவுக்கு வருவதையடுத்து புதிய பயிற்சியாளருக்கான பரிசீலனைத் தொடங்கியுள்ளது, பிசிசிஐ-யின் இந்த முடிவை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி.
கிரேடு ஏ ஒப்பந்த வீரர்களுக்கு அதிக சம்பளம் வேண்டும் என்பதை அனில் கும்ப்ளே முன்னெடுத்தார், இதனையடுத்து அவர் உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகிகள் கமிட்டியை அனில் கும்ப்ளே அணுகியதாகவும் இதனால் பிசிசிஐ நிர்வாகத்தினரிடையே அதிருப்தி ஏற்பட்டதாகவும் ஒருதரப்பு வாதம் கூறுகிறது.
இன்னொரு தரப்பு வாதங்களின் படி இந்திய கிரிக்கெட் இயக்குநர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு கும்ப்ளே பதவி உயர்வு பெறலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் புதிய பயிற்சியாளருக்கான பரிசீலனைகள் தொடங்கிவிட்ட நிலையில் பிஷன் சிங் பேடி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
“மிகவும் மோசம், இப்போது யாராவது அனில் கும்ப்ளேயின் பங்களிப்புக்கு சவால் விடுவார்களா? ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் அவரது ரெக்கார்ட் அபாரமானது.
நாம் (பிசிசிஐ) என்னதான் செய்ய முயற்சிக்கிறோம்? இந்த மாதிரியான வேலைகளில் ஏன் ஈடுபட வேண்டும்? இதுதான் பிசிசிஐ நிர்வாகத்தின் மோசமான அணுகுமுறை.
மேலும் சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி சென்றுள்ள நிலையில் தேவையில்லாத குழப்பத்தை விளைவிக்கிறார்கள். அதாவது காரணமின்றி குழப்பம் விளைவிக்கப்படுகிறது. இது முட்டாள்தனமானது.
பிசிசிஐ தனது தவறுகளை திருத்திக் கொள்வதாக இல்லை. சாம்பியன்ஸ் டிராபி ஆட வேண்டிய நிலையில் தேவையில்லாமல் ஒரு நிச்சயமின்மையை எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஏற்படுத்துவது ஏன் என்று புரியவில்லை.
பொதுவாக பயிற்சியாளரிடம் தனிப்பட்ட முறையில் தொடர விருப்பமா என்று கேட்பதுதான் வழக்கம். ஆனால் இங்கு தேவையில்லாமல், காரணமின்றி ஒரு குண்டைத் தூக்கிப் போடுகின்றனர்”
இவ்வாறு சாடியுள்ளார் பிஷன் பேடி.