டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் வீழ்த்துவதில் அதிவிரைவு இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சிறப்பைப் பெற்றார், சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின்.
மும்பையில் இன்று தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், சமியின் வீக்கெட்டை கைப்பற்றினார் அஸ்வின். அது, டெஸ்ட் போட்டிகளில் அவரது 100-வது விக்கெட் ஆகும்.
இதன்மூலம் 18 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்துவதில் அதிவிரைவு பந்துவீச்சாளர் என்ற சிறப்பைப் பெற்றார்.
முன்னதாக, எரபள்ளி பிரசன்னா 20 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் என்ற உச்சத்தை எட்டியிருந்தார். அவரது சாதனையை இப்போது அஸ்வின் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், ஆல்ரவுண்டர் பிரிவில் உலக அளவில் அஸ்வின் முதலிடத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.
முன்னாள் இந்திய சுழற் பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே 21 டெஸ்ட்களிலும், சுபாஷ் குப்தா, பகவத் சந்திரசேகர் மற்றும் ஓஜா ஆகியோர் 22 போட்டிகளிலும் தங்களது 100 விக்கெட்டுகளை எட்டியது குறிப்பிடத்தக்கது.