நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாம் நகரில் 1928-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 9-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் போட்டி 16 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது. கோடைகால ஒலிம்பிக் என்ற பெயரில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் இதுதான்.
இதில் 46 நாடுகளைச் சேர்ந்த 2,606 வீரர்கள், 277 வீராங்கனைகள் என மொத்தம் 2,883 பேர் கலந்து கொண்டனர். 15 விளை யாட்டுகளில் 109 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் முறையாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. முதல் முறையாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணி வகுப்பு நடத்தப்பட்டது. மகளிர் பிரிவில் முதல் முறையாக தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.
22 தங்கம், 18 வெள்ளி, 16 வெண்கலம் என 56 பதக்கங்களை வென்ற அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதலிடத் தைப் பிடித்தது. 1920, 1924 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட்ட ஜெர்மனி இந்த முறை பங்கேற்று 10 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. பின்லாந்து 8 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்தது.
இளவரசர் ஜப்பானின் மிகியோ ஓடா மும்முறைத் தாண்டுதல் போட்டியில் 15.21 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். இதன் மூலம் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமை பெற்றார். பின்லாந்தின் பாவோ நர்மி, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக்கில் 9-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். நார்வே இளவரசர் ஓலேவ், படகுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.
முதல் தங்கம்
ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. இதுதான் ஒலிம் பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம். இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நெதர் லாந்தை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்த தொடரில் 18 ஆட்டங்களில் 69 கோல்கள் அடிக்கப் பட்டன. இந்தியாவின் தயான் சந்த் 14 கோல் களை அடித்து முதலிடம் பெற்றார்.
உயிரைப் பறித்த பரிசு
கனடாவின் பெர்ஸி வில்லியம்ஸ் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் தங்கம் வென்றார். அப்போது அவருக்கு 20 வயது மட்டுமே. இந்த வெற்றிகளால் கனடாவின் கதாநாயகனாக உருவெடுத்தார். இதுமட்டு மின்றி 1930-ல் நடைபெற்ற முதல் காமன் வெல்த் போட்டியிலும் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். 69 வயது வரை தனது தாயுடன் வசித்தார் வில்லியம்ஸ். அதன்பிறகு மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட அவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்தத் துப்பாக்கி 1928-ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதற்காக அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டதாகும்.