ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தரவரிசையில் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆண்கள் பிரிவிலும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மகளிர் பிரிவிலும் முதலிடத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் டென்னிஸ், அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆகியவை கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளாகும்.
இதில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 13-ம் தேதி மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்கி 26-ம் தேதி முடிவடைகிறது.
இதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரபேல் நடால் முதலிடத்தில் உள்ளார். செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 2-வது இடத்திலும், ஸ்பெயின் டேவிட் பெரர் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே 4-வது இடத்தில் உள்ளார். இப்போட்டியில் நடால், நோவாக் ஜோகோவிச், ஆண்டி முர்ரே ஆகியோருக்கு இடையே பட்டத்தை வெல்ல கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
13 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நடால் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2–வது முறையாக வெல்லும் முனைப்பில் களம் இறங்குகிறார். கடைசியாக அவர் 2009–ம் ஆண்டு இந்த பட்டத்தை வென்றார்.
17 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்றுள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 2012–ம் ஆண்டுக்கு பிறகு எந்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்லவில்லை.
மகளிர் தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில் உள்ளார். பெலாரஸின் விக்டோரியா அசரென்கா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோர் முறையே 2,3-வது இடத்தில் உள்ளனர்.
சீனாவின் லீ நா, போலந்தின் ரத்வென்ஸ்கா, செக் குடியரசின் குவிட்டோவா, இத்தாலியின் சாரா எர்ரானி, செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிச், ஜெர்மனியின் கெர்பர், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளனர்.
செரீனா வில்லியம்ஸ் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். ஆஸ்தி ரேலிய ஓபன் பட்டத்தை இப்போது 6-வது முறையாக வென்றால், ஒட்டுமொத்தமாக 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங் களை வென்று மார்டீனா நவரத்திலோவாவின் சாதனையை சமன் செய்வார். ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனான அசரென்கா இந்தமுறை பட்டம் வென்றால் தொடர்ந்து 3 முறை பட்டத்தை வென்று சாதனை படைப்பார்.